ஓபிஎஸ் – இபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு? சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி சொன்ன இபிஎஸ்!

அதிமுகவின் இரட்டை தலைமை ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்ததற்கான காரணங்களை ஊடகங்களிடம் தெரிவித்துவிட்ட போதிலும், அவர்கள் என்ன காரணத்துக்காக பிரதமரை சந்தித்தார்கள் என்ற விவாதங்கள் தமிழ அரசியலில் எழுந்துள்ளன.

aiadmk leaders ops eps, ops eps meets pm narendra modi, what reason ops eps meets pm modi, ஓபிஎஸ் - இபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தது எதற்கு, சசிகலா குறித்த கேள்விக்கு நன்றி சொன்ன இபிஎஸ், ops, eps, sasikala, aiadmk, tamilnadu politics

அதிமுகவின் இரட்டைத் தலைமையான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் திங்கள்கிழமை (ஜூலை 26) டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், ஊடகங்கள் சசிகலா குறித்து எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் நன்றி தெரிவித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றனர். அங்கே அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்கிறார்கள் என்று செய்தி வெளியானது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, சசிகலா மீண்டும் அதிமுகவை மீட்டெடுப்பேன், தொண்டர்களை சந்திக்க மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாக பேசி வருகிறார். மேலும், அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசிய ஆடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த சூழலில்தான், அதிமுகவின் இரட்டை தலைமை ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் டெல்லி சென்று திங்கள்கிழமை (ஜூலை 26) டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடன் இருந்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கவும் நானும் ஓபிஎஸ் அவர்களும் பிரதமரை கேட்டுக்கொண்டோம். மேகதாது அணை பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுவரை, அதன் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும், அதன் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் அணையைக் கட்டக்கூடாது, அதற்கு மத்திய அரசு உதவக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். அதையே இப்போது தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும். தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அதை பிரதமர் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க கேட்டுக்கொண்டோம். அதோடு நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. அதை போக்குவதற்காக குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம்.

சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்றவும், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது நடவடிக்கை குறித்தும் அதை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்தோம்” என்று கூறினார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விலகுகின்றனர், அதற்கு தலைமை மீது அதிருப்தி காரணமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த, இபிஎஸ், “தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர்கள் விலகிச் செல்கின்றனர். தொண்டர்கள் யாருக்கும் அதிருப்தி இல்லை. கட்டுக்கோப்பான இயக்கமாக அதிமுக உள்ளது.” என்று கூறினார்.

இதையடுத்து, “பிரதமரிடம் தமிழக அரசின் ஆட்சி மீது புகார் எதுவும் தெரிவித்தீர்களா” என்று ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று 3 மாதம் தான் ஆகிறது. இதில் என்ன குறைகளை நாங்கள் சொல்ல முடியும். தமிழக மக்களுக்கு தேவையான, நன்மையளிக்கும் திட்டங்களை நிறைவேற்றக் கோரினோம் அவ்வளவே.” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனையைத் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அப்படி ஒரு தகவல் இருந்ததால் அறிக்கை விட்டோம், கற்பனையாக நான் சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள், எதையும் நான் கற்பனையாக சொல்லவில்லை, தமிழக அரசு லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்ததால் ஆட்சேபித்தோம். அவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் கொண்டுவரவில்லை என்றால் நல்லதுதான்.” என்று கூறினார்.

இதையடுத்து, சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசுவதை ஆடியோவாக வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து பேட்டியை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

அதிமுகவின் இரட்டை தலைமை ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்ததற்கான காரணங்களை ஊடகங்களிடம் தெரிவித்துவிட்ட போதிலும், அவர்கள் என்ன காரணத்துக்காக பிரதமரை சந்தித்தார்கள் என்ற விவாதங்கள் தமிழ அரசியலில் எழுந்துள்ளன. பிரதமர் மோடி சந்திப்பின்போது சசிகலாவைப் பற்றி பேசினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இபிஎஸ் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டது ஏன் என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk leaders ops eps meets pm narendra modi what reason

Next Story
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி – ஜூலை 28ல் துவக்கம்Covid vaccine, mk stalin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express