அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்துவதற்கு அக்கட்சியின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் - இபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க கோரியுள்ளனர்.
2017ம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்களை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில்தான், அதிமுகவில் உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்திய நிலையில், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்துவதற்கு 6 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இந்த தகவல் சுமார் 10 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்துவதற்கு ஏற்பட்ட தாமதத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுக, உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கட்சி விதி 30 (ii)இன் படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிமுகவில் உள்கட்சி தேர்தல் கடைசியாக ஜெயலலிதா இருந்தபோது ஆகஸ்ட் 2014 முதல் ஏப்ரல் 2015 வரை நடைபெற்றது. ஆகஸ்ட் 29, 2014-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக 7வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு, 5 ஆண்டுகள் கடந்திருந்தாலும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் தலைமையாக செயல்பட்டு வருகின்றனர். செப்டம்பர், 2017ல் தொடர் திருத்தங்கள் மூலம், பொதுச் செயலாளர் இடத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி, அனைத்து முதன்மை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான முந்தைய ஏற்பாட்டிற்கு பதிலாக இரண்டு பதவிகளுக்கும் பொதுக் குழு அங்கீகாரம் வழங்கியது.
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்துவதற்கு அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுப்பது இது முதல்முறை அல்ல, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் அதிமுக இதேபோன்ற வேண்டுகோளை விடுத்தது. ஆனால், தேர்தல் ஆணையம், சில வாரங்களுக்கு முன்பு, ஜூலை நடுப்பகுதியில் உள்கட்சி தேர்தல் நடைமுறையை நடத்தி முடிக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், முதலில் அவகாசம் நீட்டிப்புக்கான அதிமுகவின் வேண்டுகோள் சம்பந்தமான கோரிக்கை தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அடையவில்லை. இந்த முறை, முந்தைய கோரிக்கையின் நகலை வழக்கமான தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் இணைத்து மற்றொரு கோரிக்கையை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அதிமுக தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அதனால், கட்சித் தலைமையில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஒற்றுமையை உறுதிசெய்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் பொதுக்குழுவைக் கூட்டும் விவகாரத்தில், அதன் கடைசி கூட்டம் ஜனவரி 9ம் தேதி நடந்தது. அந்த கூட்டம் 2020ம் ஆண்டுக்கான கூட்டம் என்று கூறப்பட்டது. நடப்பு ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டப்படலாம். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. இருப்பினும், இயல்புநிலை திரும்பியவுடன், அதிமுக தலைமை விரைவில் கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.