அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி தொகுதி எம்.பி-யான தனது மகன் ரவீந்திரநாத்துக்கு டெல்லியில் ஒதுக்கப்பட்ட தனி பங்களாவில் பால் காய்ச்சுவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து, அவர் நாளை (ஜூலை 26) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவியது. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 4 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.
தேர்தலின்போது, பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரசாரத்துக்காக 2 முறை தமிழ்நாடு வருகை தந்தனர். தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, பாஜக உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுகவில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியை இழந்த பிறகும்கூட பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் பாஜகவை நாடாளுமன்றத்தில் தீவிரமாக ஆதரித்து வருகிறார். அண்மையில் பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு இடம் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ரவீந்திரநாத் குமார், எம்.பி என்ற முறையில் அவரது மகனுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் டெல்லியில் தனி பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதனால், ரவீந்திரநாத் குமார் எம்.பி-யின் தனி பங்களாவில் இன்று (ஜூலை 25) பால்காய்ச்சும் நிகழ்ச்சிக்காக ஓ.பி.எஸ் குடும்பத்துடன் டெல்லி சென்று இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகனின் பங்களாவில் பால்காய்ச்சும் நிகழ்ச்சி முடிந்ததும், ஓ.பிஎஸ், நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இன்று இரவு டெல்லிக்கு செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், ஓ.பிஎஸ் - இ.பி.எஸ் இருவரும் நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. தேர்தலுக்கு பிறகு, அதிமுகவின் இரட்டை தலைமை ஓ.பிஎஸ் - இ.பி.எஸ் இருவரும் நாளை டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"