ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், அ.தி.மு.க அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதால், அந்த கடிதத்தை ஒ.பி.எஸ் தரப்பு கைப்பற்ற தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வடிவத்தி விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுகுழுவில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓ.பி.எஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அ.தி.மு.க பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு அளித்தது.
சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள்ளது.
இதனிடையே, அ.தி.மு.க-வில் தலைமை யார் என்று உரிமை கோருவதற்கு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு இடையே காய்நகர்த்தல்கள் நடந்து வருகிறது.
இந்தியா ஜி20 நாடுகளுக்கு தலைமை தாங்குவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்து மத்திய அரசால் அனுப்பப்பட்ட கடிதத்தில், இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டு இருந்தது. இது பழனிசாமி தரப்புக்கு ஒரு மைல் கல் முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த கடிதம் அனுப்பப்பட்டதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அ.தி.மு.க ஆண்டு வரவு செலவு கணக்கு ஆவணத்தில் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டிருந்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதுவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், அ.தி.மு.க அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்பியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்சியடையச் செய்துள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்குமாறு, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற் காக, ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, ஐ.யு.எம்.எல், பா.ம.க ஆகியவற்றுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு, அலுவலர் மூலம் அனுப்பி வைத்தார்.
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தரப்பு தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம் தொடர்பாக, அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்றும் பழனிசாமி தரப்பு தெரிவிக்கிறது. எனவே, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலர் மூலம், அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தை அக்கட்சி திருப்பி அனுப்பியது. தேர்தல் ஆணையத்திடம் உள்ள தகவல்படியே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஜனவரி 2-ம்ட் தேதி அஞ்சல் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இது பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கடிதத்தை பழனிசாமி தரப்பு ஏற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி தரப்பு நிர்வாகி ஐ.எஸ்.இன்பதுரை, “அ.தி.மு.க-வில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. அப்படி இருக்கும்போது, சரியான பெயரைக் குறிப்பிட்டுத்தான் கடிதம் அனுப்ப வேண்டும். அ.தி.மு.க அலுவலகம் எங்கள் வசம் உள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ளவருக்கு எப்படி கடிதம் செல்லும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்தக் கடிதத்தைப் பெறாவிட்டால், தேர்தல் ஆணையத்திடம் அந்தக் கடிதத்தைக் கேட்டுப்பெற ஓ.பி.எஸ் தரப்பு முயற்சி செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில், தங்கள் தரப்பு நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று, ஓ.பி.எஸ் தரப்பு நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“