2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முன்னதாக, விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது, இடைக்கால பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக மூத்த தலைவரும், பொருளாளருமான ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு பிப்.23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் வழங்கிய அந்தத் தீர்ப்பில், “ அதி்முக பொதுக்குழு செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
முன்னதாக, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/