கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆளும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விஷச் சாராய விவகாரத்தில், ஆட்சியரே தவறான தகவல் தருவதால், ஆணைய விசாரணை சரியாக இருக்காது, மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம்” என்று வலியுறுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் கிராமத்தில், மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்திருப்பது நாட்டையே உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதே போல, கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கள்ளக்குறிச்சி விஷச் சாரயாம் பலிகளின் எதிரொலியாக,மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (ஜூன் 21) கூடியது. முதல் நாளே எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலில் அ.தி.மு.க உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து தி.மு.க அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பேரவையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விவாகரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போத, அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும்,‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டபடி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, சட்டப்பேரவைக் கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. சட்டமன்ற மரபுப்படி முதலில் நாம் திருக்குறளை வாசித்துவிட்டு தொடங்குவோம். வினாக்கள் விடை, இந்த நேரம் மக்களுக்கான நேரம், பலவிதமான கேள்விகளை சட்டமன்ற உறுப்பினர்கள் தந்திருக்கிறீர்கள். அது முடிந்ததற்கு அப்புறம், நீங்கள் எழுந்து எந்தப் பிரச்னையைக் கேட்டாலும், அதற்கு நான் அனுமதி தாறேன். நீங்கள் பேசுவதற்கு எவ்வளவு நேரம், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் உங்களுக்கு தேவையான நேரமும் நான் தருவேன். நீங்கள் தாராளமாகப் பேசலாம். இந்த அவையில் பதிவு பண்ணலாம். அதைவிட்டுவிட்டு, நீங்கள் 4 வருடம் முதலமைச்சராக இருந்தவர், உங்களுக்கு எல்லா சபை நடவடிக்கையும் தெரியும். அது இல்லாமல், நினைச்ச நேரத்தில், நினைச்ச விஷயத்தைப் பேச வேண்டிய இடம் இது இல்லை.” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.ஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது.” என்று கூறினார்.
மேலும், “சாராய விஷ முறிவுக்கு செலுத்தும் மருந்தின் பெயரை மாற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தடை செய்யப்பட்டுள்ள அந்த மருந்தை ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டு பேசி உள்ளார். அரசு மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறது; துரிதமாக செயல்பட்டு இருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.