காங்கிரஸ்,திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் ரத்து செய்வதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவது பொய்யான அரசியல் வாக்குறுதி என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
Advertisment
திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலாக முலாயம் சிங் பெயரை குறிப்பிட்டதால் கூட்டத்தில் சில சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சர் தனது உரையில், " காங்கிரஸும், திமுகவும் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. முன்னாள் பிரதமர் முலாயம் சிங் யாதவ் தலைமையில் என கூறிய திண்டுக்கல் சீனிவாசன் சுதாரித்துக் கொண்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு சட்டம் நிறைவேற்றப்பட்டது" எனத்தெரிவித்தார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகுவது வழக்கம். பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் நரசிம்ம ராவ் என்றும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் என்றும்( மோடிக்குப் பதிலாக) பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தில் வாக்கு கேட்பதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்டதும், ஏசு சுடப்பட்டார் என்ற இவரது கூற்றும் கடும் சர்ச்சையாக உருவெடுத்தது.
முன்னதாக, நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து தனது காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.