AIADMK Ministers Yagam: மழை வேண்டி அதிமுக-வினர் யாகத்திலும், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி திமுக-வினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. மழை குறைந்தது, பெய்த மழையை சேமிக்காதது, நிலத்தடி நீரின் அளவு குறைந்தது என இதற்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள் வல்லுநர்கள். குறிப்பாக தமிழகத்தின் முகமாக விளங்கும் சென்னையில் மிக மோசமான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முன்னதாக தண்ணீர் தட்டுப்பாட்டால் நிறைய உணவகங்கள் மூடப்பட்டன. ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மெட்ரோ நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொதுக் கழிப்பிடங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் குறிப்பிட்ட சில தொகுதிகளின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.
இப்படி மோசமான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகையில், இதற்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து, எதிர்க்கட்சியான திமுக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
இதற்குப் போட்டியாக அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி ‘யாகம்’ நடத்தி, அன்னதானம் வழங்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு கோயில்களில் யாகம் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஈரோடு பச்சைமலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் யாகம் நடைபெற்றது. திருச்சி, ஸ்ரீரங்கம், உறையூர் ஆகியப் பகுதிகளில் நடைபெற்று வரும் யாகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கடலூரில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் யாகம் நடைபெற்றுவருகிறது. அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் நடக்கும் யாகத்தில் ராஜன் செல்லப்பா பங்கேற்றுள்ளார்.
இப்படி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அதிமுக தலைமையின் ஆணைக்கிணங்க யாகம் நடைப்பெற்று வருகின்றன.