Aiadmk | edappadi-k-palaniswami | o-panneerselvam: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீ்ர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கி கொண்டனர். இதில், பல பிரச்சினைகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.
இந்நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தார். அத்துடன் அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவுவை ஏற்கனவே இரண்டு முறை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளை மாற்றவும், ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9-ம் தேதி கூட உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளை மாற்றக் கோரியும், எதிர்க்கட்சி துணைத்தலைவரை மாற்ற வேண்டும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் 3வது முறையாக மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகரிடம் 3வது முறை வலியுறுத்தினோம். எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினோம். சபாநாயகர் மனுவை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்' என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“