அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க-வைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என ஒரு அதிரடியாக ஒரு திரியைக் கொளுத்திப்போட, பதிலுக்கு, திமுக அமைப்புச் செயலாளர், ஆர்.எஸ்.பாரதி, “எங்களுடன் 50 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகிறார்கள்” என்று தவுசன் வாலா ஒன்றைக் கொளுத்திப்போட்டார்.
இதனால், தி.மு.க-வுடன் பேசிவரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் யார், யார் என்ற ஊகங்களும் வட்டாரங்கள் கூறிய தகவல்களும் ஊடகங்களில் செய்தியானது. தி.மு.க-வுக்கு தாவும் முதல் எம்.எல்.ஏ இவர் என்றால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் யார் என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்த நிலையில்தான், சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி, கோயம்புத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்சியில், ‘வருமுன் காப்போம்’ திட்டத்தையும் மு.க. ஸ்டாலினையும் புகழ்ந்து பேசினார். இதனால், தி.மு.க கூறிய அ.தி.மு.க எம்.எல்.ஏ இவர்தானா என்ற கேள்விகள் எழுந்தன. சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி தி.மு.க-வுக்கு தாவப் போகிறாரா என்று அ.தி.மு.க-வில் சலசலப்பு எழுந்தன.
அந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி கலந்துகொண்டு பேசுகையில், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சுகாதாரத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தினர். அதேபோல், ஸ்டாலினும் சுகாதாரத் துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறார என்று புகழ்ந்து பேசினார்.
சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசியதன் மூலம், அவர் தி.மு.க-வுக்கு மாறப்போகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், “தனது விசுவாசத்தை வேறு எந்த கட்சிக்கும் மாற்றமாட்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ வி.பி. கந்தசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “அது அரசு விழா என்பதால், என்னால் அரசியல் பேச முடியாது. 1972-ல் அ.தி.மு.க ஆரம்பித்ததில் இருந்து நானும் எனது குடும்பத்தினரும் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக இருந்து வருகிறோம். எனது விசுவாசத்தை வேறு எந்த கட்சிக்கும் மாற்ற மாட்டேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில், பொதுமக்களின் குறைகளை முன்னிலைப்படுத்தவும், நிவர்த்தி செய்யவும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"