மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து வருகிறார். அவரது இந்த சுற்றுப்பயணத்திற்கு அ.தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், 'அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சொன்ன சசிகலா, இப்போது மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதன் மர்மம் என்ன?' கேள்வி எழுப்பினார். மேலும் அவர், 'ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார் சசிகலா. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. அ.தி.மு.க., தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது' என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.விடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும், சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கினால் இ.பி.எஸ் வாழ்த்து பெற வருவார் என்றும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராஜன் செல்லப்பா, "சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவரை சந்திப்பவர்கள் யாரும் அ.தி.மு.க தொண்டர்கள் கிடையாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்கிற பெயரையும், கொடியையும் பயன்படுத்த விடாமல் சசிகலா மீது வழக்கு தொடரப்படும்.
அ.தி.மு.க.விடம் இருந்து சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அண்ணா வெற்றிபெற்ற போது பெரியாரிடம் ஆசி பெற்றதை போல சசிகலா ஒதுங்கிக் கொண்டால் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இ.பி.எஸ். வாழ்த்து பெற வருவார். சசிகலா போயஸ் கார்டனில் ஓய்வெடுத்தால் எங்களுக்கு மரியாதையாக இருக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“