முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தனித்தனியே கடிதம் அனுப்பினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு ஒருவரை முதல்வராக ஏற்கவும் தயார் எனவும் அக்கடிதத்தில் 18 எம்.எல்.ஏ.க்களும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 01.40 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அதில், முதலில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்றார். அடுத்ததாக தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்றார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ளதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை, தற்போது உள்ள நிலைமையே தொடருகிறது.
இத்தீர்ப்பு குறித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் ரியாக்ஷன்ஸ் குறித்த Live Updates இங்கே,
டிடிவி தினகரன் - மக்கள் விரோத அரசுக்கு, இந்த தீர்ப்பு மேலும் சில காலம் ஆட்சி நடத்த அனுமதி அளித்துள்ளது. சபாநாயகரின் முடிவு தவறு என நீதிபதி தெளிவாக கூறியுள்ளார். புதுச்சேரி சபாநாயகர் விவகாரத்தில் வேறு தீர்ப்பு, தமிழ்நாட்டு வேறு தீர்ப்பு என இரு மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கியுள்ளார்.
நான் வக்கீல் இல்லை. ஆனால், இரு வேறு தீர்ப்புகளை இந்திரா பானர்ஜி ஏன் வழங்கினார் என்று தெரியவில்லை.
புதுச்சேரியிலும், தமிழகத்திலும் வெவ்வேறு சட்டமா? தமிழக் மக்கள் எங்களுக்கு தான் ஆதரவு தருவார்கள். மக்களுக்கு இந்த தீர்ப்பு குறித்த உண்மை என்னவென்று தெரியும்.
எம்.எல்.ஏ.கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். அனைவரும் என் கூடத் தான் இருக்காங்க. 18 பேரும் கட்சிக்காக தங்கள் பதவியை தியாகம் செய்தவர்கள். அவர்கள் நினைத்து இருந்தால், அரசிடம் போய் சேர்ந்து இருக்கலாம். என்னை அவர்கள் 18 பேரும் எம்.எல்.ஏவாக்கி அவர்கள் சார்பில் சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள். ஒருநாள் ஒரு எம்.எல்.ஏ வரவில்லை என்றாலும், அதை பரபரப்பான செய்தி ஆக்காதீர்கள். நானே போகச் சொன்னாலும், அவர்கள் போக மாட்டர்கள். இதுதான் உண்மை. எங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்திருந்தால் கூட இவர்கள் என்னை விட்டு போக மாட்டார்கள். ஒரே குடையின் கீழ் அனைவரும் பொதுச் செயலாளர் தலைமையில் ஒன்றாக இணைந்துள்ளோம்.
இத் தீர்ப்பின் மூலம், இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் 2 - 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் வருத்தமாக உள்ளது. நீதிமன்றம் மேல் உள்ள நம்பிக்கையில் நிச்சயம், மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. இரு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வழங்கியிருந்தால், நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று வென்று இருப்போம். ஆனால், இப்போது மக்கள் தான் தோற்று போயிருக்கிறர்கள்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் - பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு தீர்வில்லாமல் வந்துள்ளது. யாருக்கும் சாதகம் இல்லை, யாருக்கும் பாதகம் இல்லை. அணுகுண்டும் இல்லை.. புஸ்வான்மும் இல்லை. ஊசி வெடியாய் தீர்ப்பு வெடித்துள்ளது. இரு நீதிபதிகளும் இரு வெவ்வேறு தீர்ப்புகளை அளித்துள்ளனர். இதனால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு நாம் பொறுத்திருக்க வேண்டும். நீதிபதியின் கருத்துக்கு விமர்சனம் சொல்லும் அளவிற்கு நான் சூப்பர் நீதிபதி கிடையாது. நிச்சயமற்ற தன்மையை தமிழக அரசில் மீண்டும் இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் - ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.
ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) June 14, 2018
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் - அவர் கூறுகையில், "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு தரப்பிலும் மகிழ்ச்சி அடைய முடியாத வகையில் அமைந்துள்ளது. இரு வெவ்வேறு தீர்ப்புகளை நீதிபதிகள் அளித்துள்ளனர். விரைவில் மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. மிக விரைவாக மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும். தற்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டிய தேவையும் எழவில்லை. 18 இடங்களில் மறு தேர்தல் நடத்தவும் தேவையில்லாமல் போய்விட்டது. இது யாருக்கும் சாதகம் இல்லாத தீர்ப்பு" என்றார்.
கி.வீரமணி - தமிழ்நாட்டின் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது; பிழைக்குமா, பிழைக்காதா என்பது பிறகே தெரியும்.
அதிமுகவின் வைகைச் செல்வன்- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, தினகரன் அணிக்கு யானையின் காதுக்குள் புகுந்த கட்டெறும்பைபோல அதிருப்தியை தந்துள்ளது.
முத்தரசன் - முறையாக் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் வழிவகுக்க வேண்டும். இரு மாறுப்பட்ட தீர்ப்பு வந்துள்ளது. மொத்தத்தில் அரசு தொடர்ந்து பின்னடைவு அடைந்துள்ளது. மக்களின் ஆதரவும் இந்த அரசுக்கு இல்லை. இது தான் யதார்த்த உண்மை.
பாமக நிறுவனர் ராமதாஸ் - சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட இருவேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குழப்பம் தொடர இந்தத் தீர்ப்புகள் வகை செய்துள்ளன.
கால தாமதங்களின் புண்ணியத்தில் தான் பினாமி அரசு காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. எந்த வகையில் பார்த்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவி நீடிக்கும் தகுதியை இழந்து விட்டது. ஆகவே, பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் - மோசமான திரைப்படம் எப்போது முடியும் என காத்திருக்கும் ரசிகர்கள் போல் ஏமாற்றம்; வணக்கம் போடுவார்கள் என எதிர்பார்த்தால் மீண்டும் இடைவேளை விட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.