தமிழக அரசியலில் இரண்டு துருவங்களாக இருந்து வரும் திமுக – அதிமுக கட்சிகளின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, அதிமுக எம்.பி. நவநீதிகிருஷ்ணன் கலைஞர் அரங்கிற்கு வந்து கனிமொழிக்கு திடீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுகவில் இருந்து விலக்கப்பட்ட எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக உருவான பிறகு, 2 கட்சிகளும் 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழக அரசியலில் இரண்டு துருவங்களாக இருந்துவந்துள்ளன. இரு கட்சிகளுக்கு இடையேயான இந்த எதிர்ப்பு என்பது கருணாநிதி vs எம்.ஜி.ராமச்சந்திரன், கருணாநிதி vs ஜெயலலிதா என்று ஆளுமைகளின் துருவங்களாக மாற்றியது. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் மேடைகளில் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளனர்.
ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் திமுக தலைமைகளுக்கு இடையேயான எதிர்ப்பு என்பது தொடர்ந்து வருகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் அரசியல் நாகரீகம் கருதி சந்தித்துக்கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால், அது வெறும் அரசியல் நாகரீக சடங்காகவே இருந்து வந்துள்ளது.
ஆனால், நீட் தேர்வு ரத்து சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கோரி அதிமுகவும் திமுகவும் ஒரே நிலைப்பாட்டில் நின்றபோது, அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து ஊடகங்களை சந்தித்தார். அப்போதே, அந்த நிகழ்வு கவனம் பெற்றது.
இந்நிலையில்தான், அதிமுக ராஜ்ய சபா எம்.பி. நவநீதிகிருஷ்ணன், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், அந்நிகழ்ச்சியில் பேசிய நவநீதகிருஷ்ணன், “திமுக எம்.பி கனிமொழி தனக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளைக் கற்றுக்கொடுத்தவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலையத்தில் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்று பேசிய நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்திற்கு சென்றபோது பல்வேறு விஷயங்களை கற்க வேண்டிய நிலையில் இருந்ததாகக் கூறினார். விவாதம் ஒன்றில் மத்திய அமைச்சருடன் சண்டை போடும் நிலை ஏற்பட்டது என்று நினைவுகூர்ந்த அவர், அப்போது கனிமொழிதான் சர்ச்சையில் சிக்காமல் பார்த்துக்கொண்டார் என்று கூறினார்.
தமிழக அரசியலில் இரண்டு துருவங்களாக இருந்து வரும் திமுக – அதிமுக கட்சிகளின் வரலாற்றில் அரிய நிகழ்வாக, அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்திற்கு சென்று கனிமொழியை புகழ்ந்து பேசி இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோருடன் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணனும் பங்கேற்றார். இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த திமுக ஆதரவாளர்கள், நெட்டிசன்கள், “திமுக தலைவர் ஸ்டாலினுடன் மேடையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன். திமுக அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி… புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. நமக்கு முன்னாள் இருந்த தலைவர்கள் இதைத்தான் விரும்பினார்கள். தளபதி காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“