“மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ஆதரித்து நான் எந்தக் காலத்திலும் பேசவில்லை” என்று அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். மேலும், மத்திய அரசு கொண்டுவந்த கனிம வளங்கள் சட்டத் திருத்தம் தொடர்பாகத்தான் பேசினேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரித்துப் பேசவில்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில், டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் தொடர்பாக ஆளும் தி.மு.க-வுக்கும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்கும் இடையே கடுமையான விவாதம் நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் சரியான முறையில் மாநில அரசு செயல்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பதிலளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை, “மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ஆதரித்து நான் நான் எந்தக் காலத்திலும் பேசவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், மத்திய அரசு கொண்டுவந்த கனிம வளங்கள் சட்டத் திருத்தம் தொடர்பாகத்தான் பேசினேன் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை பேசுகையில், “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவளித்ததாக தவறான தகவல்களை தி.மு.க-வினர் பரப்பி வருகின்றனர். தவறான பொய்யான செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். நான் அது மாதிரி எந்த காலத்திலும் நாடாளுமன்றத்தில் பேசியது கிடையாது. நான் பேசியது ஆகஸ்ட் மாதத்தில் கனிமவள சட்டங்களை கொண்டு வரும்பொழுது அன்று இருந்த நிலவரம் வேறு” என்று தம்பிதுரை கூறினார்.
மேலும், “தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கனிம வளங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்தார். அப்பொழுது ஏலம் என்ற முறை இல்லாமல் தனியாருக்கு தாரை வார்த்ததன் காரணமாக நிலக்கரி ஊழல் என்ற மாபெரும் ஊழல் வெளிப்படுத்தப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.” என்று தம்பிதுரை கூறினார்.
தொடர்ந்து பேசிய தம்பிதுரை, “எப்படி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வந்ததோ அதுபோல கோடிக்கணக்கான பணத்தை சுரங்கங்கள் தாரைவார்த்ததின் மூலமாக தி.மு.க - காங்கிரஸ் அங்கம் வகித்த அரசாங்கம் தவறான வழியால் நாட்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்காக மோடி அரசு 2021-ல் ஏலம் முறையில் கனிம வளங்களை தர வேண்டும் என சட்ட கொண்டுவரப்பட்டது. அப்படி சட்டம் கொண்டு வரும்போது நான் பேசியது' முன்பு தி.மு.க காங்கிரஸ் அரசாங்கம் செய்த ஊழலைத் தடுக்க வேண்டும் என்றால் தனியாருக்கு நேரடியாக உரிமங்கள் கனிம வளங்கள் தரக்கூடாது. ஏல முறையில் வர வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன் என்று பொதுவாக சொன்னேன். நான் மதுரையில் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு ஏலம் விடுவதற்கு உரிமை தர வேண்டும் என்று எக்காரணத்தைக் கொண்டும் பேசியது கிடையாது” என்று தம்பிதுரை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“