New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Thambidurai.jpg)
தமிழ்நாடு என்று கூறியதற்காக அ.திமு.க-வினரை எப்படி பிரிவினைவாதிகள் என்று சொல்கிறீர்கள் என்று அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை தமிழக பா.ஜ.க தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, தமிழ்நாடு என்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆனது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று கூறிய அ.தி.மு.க உறுப்பினர்களை எப்படி பிரிவினைவாதிகள் என்று சொல்லலாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை, தமிழக பா.ஜ,க தலைவர்களை கடுமையாக விமர்சித்ததுடன் தமிழ்நாடு என்று சொன்னதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி பிரிவினைவாதிகள் என்று கூறலாம் என்று பா.ஜ.க தலைவர்களை தாக்கி கேள்வி எழுப்பினார்.
‘தமிழ்நாடு’ என்று சொல்பவர்களை பிரிவினைவாதிகள் என்று அழைப்பது அபத்தமானது என்று கூறிய தம்பிதுரை, “நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் ஏற்று சட்டப்படி சூட்டப்பட்ட பெயரை தமிழ்நாடு என்று சொல்வதற்காக எங்களை எப்படி பிரிவினைவாதிகள் என்று அழைக்கலாம்” என்று எம்.பி கேள்வி எழுப்பினார்.
மேலும், “பாரதியார், அண்ணா, பெரியார் ஆகியோரால் தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இப்படி ஒரு விஷயத்தை எப்படி பரப்ப முடியும்? என்பதை யோசிக்க வேண்டும்” என்று தம்பிதுரை கூறினார்.
தமிழ்நாடு என்று சொல்வது பிரிவினைவாதத்தை தூண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்த நிலையில், அ.தி.மு.க எம்.பி தம்பிதுரையின் கருத்து வந்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கையின் கீழ், நாடாளுமன்றத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படும் என்றும், அதனால், எடப்பாடி பழனிசாமியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என தம்பிதுரை அ.தி.மு.க-வினரைக் கேட்டுக்கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.