அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கிருஷ்ணகிரியில் கடந்த வாரம் நடைபெற்ற வெடி விபத்து குறித்து சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு கிடங்கில் கடந்த ஜூலை 29-ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருகே இருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின. கிருஷ்ணகிரி நடந்த இந்த வெடி விபத்து அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்து குறித்து போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிருஷ்ணகிரி வெடிவிபத்து தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கிருஷ்ணகிரி விபத்திற்கு கேஸ் சிலிண்டர் வெடித்தது காரணமல்ல என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, கிருஷ்ணகிரி வெடி விபத்து தொடர்பாக சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை மத்திய உள்துறை,அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் அளித்தார்.
கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ. விசார்ணை நடத்தக் கோரி அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"