'அம்மாவின் பாராட்டு பத்திரத்தைவிட வேறென்ன வேண்டும்?’ விரக்தியை வெளிப்படுத்திய மைத்ரேயன்

நிர்மலா சீதாராமன் புறக்கணித்த விவகாரத்தில் இருந்தே மைத்ரேயன் மீது ஓ.பி.எஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் என்பது பரமபத விளையாட்டு மாதிரிதான். ஒருநாள் உயரத்தில் இருப்பவர்கள், அடுத்த நாளில் கீழே இறக்கப்படுவது சகஜம்! அதிமுக.வின் பவர்ஃபுல் டெல்லி முகமாக வலம் வந்த மைத்ரேயனுக்கும் இது சரிவுக்குரிய காலகட்டமாகப் படுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரசார திட்டமிடல் ஆகிய 3 குழுக்களிலும் அதிமுக ராஜ்யசபை உறுப்பினரான மைத்ரேயனுக்கு இடமில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக இருந்தவர் மைத்ரேயன். 1999-ல் அதிமுக.வில் இணைவதற்கு முன்பு பாஜக.வில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்! எனவே பாஜக தலைவர்களிடம் நல்ல அறிமுகம் உண்டு. இன்றும் பிரதமர் மோடியை நினைத்த நேரத்தில் சந்திக்கக் கூடியவர்!

அதிமுக.வின் அணிகள் இணைப்பு, இரட்டை இலையை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு பெற்றது ஆகியவற்றில் மைத்ரேயன் பங்கு முக்கியமானது. ஓ.பி.எஸ். அணியிலேயே கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மேற்படி குழுக்களில் இடம் பெற்றுள்ள நிலையில், மைத்ரேயனுக்கு எந்தக் குழுவிலும் இடம் கொடுக்காதது, அதிமுக.வை தாண்டி அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.

இந்தச் சூழலில் தனக்கு எந்தக் குழுவிலும் இடம் கிடைக்காதது குறித்து மைத்ரேயனே சற்று விரிவாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை.

கழகத்தில் நான் 1999 ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள்.

2009 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன்.  2009 ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி ” வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம் – An Agenda For A Better India ” என்ற தலைப்பில் அந்த தேர்தல் அறிக்கை தயாரானது.

அம்மா அவர்கள் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார். அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்மா அவர்கள் திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்தல் அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம் Power point presentation ஆக விளக்க வேண்டும். ஜெயா டிவியின் செய்தி ஆசிரியர் சுனில் செய்யலாம் என்று அம்மா அவர்களிடம் கூறியபோது, ” இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும்” என்று அம்மா உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணிக்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். நான் அறிந்த வரை ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point presentation செய்தது அதுதான் முதல் தடவை.

அடுத்த நாள் காலை அம்மா அவர்கள் கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று அம்மா அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நானும் தான். புன்னகையோடு அம்மா அவர்களும் ஏற்றுக்கொண்ட பிறகு அம்மாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார்.  ” மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ” என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார்கள்.

இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும்.’ என குறிப்பிட்டிருக்கிறார் மைத்ரேயன்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அப்போது அவரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் ஓ.பிஎஸ்.ஸுடன் சென்ற மைத்ரேயன் மட்டும் சந்தித்தார். அதன்பிறகு பிரதமரையும் ஓரிரு முறை மைத்ரேயன் மட்டுமே தனியாக சந்தித்தார்.

நிர்மலா சீதாராமன் புறக்கணித்த விவகாரத்தில் இருந்தே மைத்ரேயன் மீது ஓ.பி.எஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட 3 குழுக்களிலும் அவருக்கு இடம் இல்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close