அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் தம்பிதுரை, கட்சியின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை, மற்றும் அதிமுக எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், சந்திரசேகர் ஆகியோர் திங்கள்கிழமை திடீரென டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில்சந்திராவை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிற நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சி தேர்தல் நடத்தும் குழு அறிவித்தது.
இதனிடையே, அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, கட்சியின் தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை, அதிமுக எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், சந்திரசேகர் ஆகியோர் இன்று திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் இன்று மாலை புது டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில்சந்திராவை சந்தித்து அதிமுக சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் “சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் உட்கட்சி தேர்தல் விதிமுறைகளில் சில புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி அதிமுகவின் அமைப்பு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ்பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த புதிய விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"