ஒற்றைத் தலைமை விவகாரத்தால், எழுந்த சலசலப்புக்கும் எதிர்ப்பார்ப்புக்கும் மத்தியில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றாமல், ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்ய நடந்து முடிந்துள்ளது. பொதுக்குழு கூட்டம் மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்து வெளியேற்றிய பிறகு, ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராகவும் இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியின் இரட்டைத் தலைமையாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுகவின் அமைப்புத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரும் தீர்மானம் தொடர்பாக, விவாதிப்பதற்காக ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று வலியுறுத்தியதில் இருந்தே அதிமுகவில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்காக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே, மோதல் நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்தால் ஓ.பி.எஸ் பொதுக்குழுவையும் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி பொதுக்குழு நடத்தலாம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஜூன் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு உத்தரவிட்டார். உடனடியாக ஓ.பி.எஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணை முடிவில், பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால், ஏற்கெனவே முன்மொழியப்பட்ட தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று உயர் நீதிமன்றம் அதிகாலையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று (ஜூன் 23) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த ஓ.பி.எஸ்-க்கு எதிராக இ.பி.எஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அதிமுக ராஜ்ய சபா எம்.பி சி.வி.சண்முகம் கூறியதால் பேசியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதனிடையே, ஓ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொதுக்குழு கூட்டம் பெரும் களேபரமாக முடிந்தது.
ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று துணை ஒருங்கிணப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
இதனிடையே, ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் டெல்லி செல்ல உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனால், ஜூலை 11ம் ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை அனைவரும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
இது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளரும் அதிமுக அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான வழக்குரைஞர் ஆர்.எம். பாபு முருகவேலிடம் பேசினோம்.
அதிமுக பொதுக்குழு எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் முடிந்திருக்கிறது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் டெல்லி சென்றுள்ளார்கள். இந்த சூழலில், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு ஆர்.எம். பாபு முருகவேல், “ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்கும். பொதுக்குழு எந்த மாதிரி நடக்கும், என்ன தீர்மானங்களைக் கொண்டுவருவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாது. வழக்கமான பொதுக்குழுவாகத்தான் நடக்கும். அதில் தீர்மானங்களை நிறைவேற்றி ஒப்புதல் வழங்க வேண்டிய வேலைகளை செய்வார்கள்.” என்று கூறினார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை உறுதிதானா என்ற கேள்விக்கு, “ஏற்கெனவே தலைவர்கள் அதைப் பற்றி சொல்லிவிட்டார்கள். அதன்படி எல்லாமே நடக்கும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.