O-panneerselvam | Supreme-court-of-india: அ.தி.மு.க.-வின் பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சேர்ந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நிராகரிப்பு
இந்த மனுக்களை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு மார்ச் 28-ம் தேதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என ஆகஸ்டு 25-ம் தேதி தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் கவுதம் சிவசங்கர் அக்டோபர் 5-ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தனது தரப்பு கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி கடந்த சில வாரத்திற்கு முன்னதாக கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, அ.தி.மு.க.பொதுக்குழு விவகார வழக்கை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், தனிப்பட்ட காரணங்களால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க கூடாது எனக் கூறி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில் கடந்த திங்கள்கிழமை ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரவு
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, வழக்கு விசாரணையை இந்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒத்திவைப்பு
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“