சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்தது.
இதையடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்.12) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரரான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், “ஓபிஎஸ் கட்சியின் அடிப்படைஉறுப்பினராகக்கூட இல்லாதபோது, அதிமுக அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது. அதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவர் கையாடல் செய்துள்ளார் என்பதால், அவரிடம் சாவியை நீதிமன்றம் ஒப்படைக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக அலுவலக உரிமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தின்2ஆவது மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை மூடி சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல.
ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னை ஆகும்.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
தொடர்ந்து, “மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம்” எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், "ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும்" எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“