Advertisment

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் எதிர்த்து வழக்கு தள்ளுபடி; அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட் கண்டனம்

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
New Update
EIA வரைவு தமிழிலும் வெளியிடப்பட்டது - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசிதழில் தோ்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் ஜனவரி 29ம் தேதி தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இதுபோல ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதனால், இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்வதோடு, நடுநிலை, சுய செயல்பாட்டுடன் செயல்படும் அதிகாரிகளை நியமிக்க மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள், நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இல்லை என்றும், அதிகாரிகள் மீது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், ஏற்கனவே 17 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் யார் என நீதிபதிகள் கேட்டதற்கு, மனுதாரர் வழக்கறிஞர் என்றும் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. என்றும் பதிலளிக்கப்பட்டது. இதனைத் தொடந்து, வழக்கறிஞர்கள் பொது நல வழக்குகள் தொடர்வதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அரசியல் காரணமாக தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பொது நல வழக்கு அல்ல என்றும், தனிநபர் நல வழக்கு என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

பொது நல வழக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக இன்பதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court Tamilnadu Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment