மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ளும் கட்சித் தொண்டர்களுக்காக சென்னை மாவட்ட அ.தி.மு.க தலைவர்கள் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சித் தொண்டர்கள் தனது பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக, தென்மாவட்டங்களை மையமாக வைத்து மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளில் அக்கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபக்கம் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சித் தொண்டர்கள் தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட, கொங்கு மண்டலங்களை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று வர்ணிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இப்போது பிரிந்து தனித்தனியாக போட்டி மாநாடுகளை நடத்தும் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடத்த உள்ள பிரம்மாண்ட மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் உள்ள அ.தி.மு.க தலைவர்கள் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் தொண்டர்களை அழைத்து செல்ல சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும், மதுரையில் அ.தி.மு.க மாநாடுக்காக இப்போதே அங்கே தங்குவதற்கு அறைகள், உணவு, பயணம் செய்ய வாகனங்கள் போன்றவற்றை முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் தொண்டர்களை மாநாட்டுக்கு அழைத்து வந்து தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட இ.பி.எஸ் மற்றும் அ.தி.மு.க தலைவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் அனைவரும் சென்னையில் இருந்து அ.தி.மு.க தொண்டர்கள் மதுரை மாநாட்டில் திரளாக பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள அ.தி.மு.க-வின் 9 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். 200 டிவிசனுக்கு உட்பட்ட 300 வட்டங்களில் இருந்து 500 வேன்கள் மற்றும் கார்கள் என மொத்தம் 1000 வாகனங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் தொண்டர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூறுகையில், சென்னையில் இருந்து செல்லும் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மண்டபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டு பந்தலில் 6 இடங்களில் 3 வேளையும் உணவு இடைவெளி இல்லாமல் வழங்கப்பட உள்ளது. வட்டத்திற்கு 3 வேன் வீதம் தொண்டர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி ரெயில் ஒன்று பிரத்யேகமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 ஏ.சி. பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 1500 பேர் பயணம் செய்யலாம்.
மேலும் 2 சிறப்பு ரயில்கள் கேட்டு இருக்கிறோம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில்கள் ஒதுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். சிறப்பு ரெயில் 19-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் புறப்பட்டு 20-ந் தேதி அதிகாலை மதுரை சென்றடையும். திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் கடமை உணர்வுடன் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். வட்டங்களில் இருந்து வேன்கள் ஒழுங்கு செய்து பயணம் செய்வதை போல ஏராளமான நிர்வாகிகள் தங்கள் சொந்த கார்களில் செல்லவும் தயாராக உள்ளனர் என்று கூறினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"