ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் அ.தி.மு.க கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வேட்பாளர் தேர்வுக்கான ஒப்புதல் கடிதத்தை இன்று (பிப்.4) வெளியிட்டார். அதில், அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்த கே.எஸ். தென்னரசுவே தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை (பிப்ரவரி 5) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குள் கடிதத்தை பூர்த்தி செய்து அ.தி.மு.க தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ் மகன் உசேன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்கு தனது ஆதரவு என ஓ.பன்னீர் செல்வம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/