தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “உதயநிதி அமைச்சரானதும் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடப் போகிறதா? வாரிசு என்பதற்காக தனது மகனுக்கு முடிசூட்டு விழா நடத்துகிறார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினை தலைமைக்கு கொண்டு வருவதற்கான முன்னோட்டம் தான் அமைச்சர் பதவி. தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். திமுகவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நடைபெற்று வருகிறது என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வீட்டுக் கதவை தட்டி பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. திராவிட மாடல் என்றால் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அனைத்து துறைகளிலும் லஞ்லம் தலைவிரித்தாடுகிறது. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றியே ஸ்டாலின் சிந்தித்து வருகிறார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது. பொய் வழக்கு போட்டு அதிமுகவை முடக்க பார்க்கின்றனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஒற்றுமையாக உள்ளது. யார் நினைத்தாலும் எங்கள் ஒற்றுமையை குலைக்க முடியாது. அதிமுகவில் பிரிவு என்பதே கிடையாது. ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிமுக ஒற்றுமையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் சவுக்கடி கொடுக்க வேண்டும். மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராக கொந்தளித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற எடுத்த சபதத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார். ஜெயசங்கரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"