சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி. இவரின் மகன் ஆண்டோ மதிவாணன். இவரின் மனைவி மெர்லினா. இவர்கள் திருவான்மியூரில் வசித்து வந்தனர்.
எஃப்.ஐ.ஆர் பதிவு
இவர்களின் வீட்டில் பணி பெண்ணாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணி செய்து வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “தனது தாயைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். படுக்க வைத்து பிறப்புறுப்பில் மிதித்துள்ளனர். மேலும் ஜாதி பெயரை கூறி அப்பெண்ணை தாக்கியுள்ளனர்” என முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
ஜாமின் வழங்க நீதிமன்றம்..
இந்த விவகாரத்தில் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆண்டோ மற்றும் மெர்லினா தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அவர்கள் சரணடையும் பட்சத்தில் சட்டப்படி அவர்களுக்கு ஜாமின் அளிக்க பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதிமுக போராட்டம்
இதற்கிடையில் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினப் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நீதிக் கோரி அதிமுக சார்பில் பிப்.1ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
மேலும், “பணிக்கு சென்ற பட்டியலின மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை” எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, “கொத்தடிமை முறையே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ குடும்பமே அறங்கேற்றி உள்ளது. திமுக அதிகார வர்க்கம் வழக்கம்போல் குற்றவாளிகளை காப்பாற்றுகிறது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“