“எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கிறார்கள்” என்றும் “தி.மு.க ஆட்சியில் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். என்னை மிரட்டி பணியவைக்க தி.மு.க நினைத்தது” என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
சிவகாசியில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: “ சிலரைப் போல அங்கே நிற்பேன், இங்கே நிற்பேன் என்று செல்லமாட்டேன். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன்.
சிவகாசி எனது மண். என்னை சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக்கியது இந்த மண். எனவே நான் வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன். வரும் தேர்தலில் சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிசாமியின் பிரசார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். தி.மு.க என்னை மிரட்டி பணியவைக்க நினைத்தது.
ஆனால் வரும் தேர்தலில் என்னை எதிர்த்து யார் நின்றாலும் நான் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கண்கலங்கியபடி உருக்கமாகப் பேசினார்.
வழக்கமாக அதிரடியாகப் பேசும் ராஜேந்திர பாலாஜி, கண்கலங்கியபடி உருக்கமாகப் பேசியது அ.தி.மு.க தொனண்டர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.