டி.டி.வி. தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி ராஜ்யசபா செயலாளர் தீபக் வர்மாவிடம் மைத்ரேயன் மனு அளித்தார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் பரிதாபமாக இறந்தார். அவர் இறப்புக்கு பின்னர் அதிமுக, சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் அணியாக பிரிந்தது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்தனர்.
இதையடுத்து கட்சியில் யாருக்கு செல்வாக்கு என்பதை நிருபிக்க இரு அணிகளும் போராடி வருகின்றனர். அதிமுகவில் 18 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 3 ராஜ்யசபா உறுப்பினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்திரேயன் எம்பி மனு கொடுத்துள்ளார்.
விஜிலா சத்யானந்த் , நவநீத கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜ்யசபா செயலாளர் தீபக் வர்மாவிடம் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன் எம்.பி, தன் மீது யாரும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தான் எந்த அணியையும் சாராதவன், அதிமுகவின் நடுநிலை உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன் என்றுதான் தேர்தல் ஆணையத்தில் பேசினேன் என்று குறிப்பிட்டார்.
எனவே என் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.