மதுரையில் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க மாநாடு நடைபெற உள்ளது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சியினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டு அழைப்பிதழை கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தொண்டர்களுடன் இணைந்து மீனாட்சியம்மன் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து, இஸ்லாமியர்களின் புனித தலமான கோரிப்பாளையம் தர்ஹாவிலும், கிறிஸ்தவர்களின் புனித தலமான புனித மரியன்னை தேவாலயத்திலும் அழைப்பிதழ்களை வைத்து வழிபாடு நடத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியது பின்வருமாறு:-
மதுரையில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற உள்ள அ.தி.மு.க-வின் பொன்விழா மாநாடு, அரசியல் மாநாடாக நடைபெறுகிறது. இந்த மாநாடு நிச்சயம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். மதுரை மக்கள் மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம்.
அ.தி.மு.க மாநாட்டுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10,000 சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 இடங்களில் 300 கவுன்ட்டர்கள் அமைத்து உணவு வழங்கப்பட இருகிறது. இசையமைப்பாளர் தேவாவின் இசைக் கச்சேரி, மதுரை முத்து, ராஜலெட்சுமி – கணேஷ் தம்பதிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
செந்தில் பாலாஜியால் தி.மு.க-வின் அனைத்து அமைச்சர்களுக்கும் தூக்கம் இல்லாமல் பதற்றதுடன் தவித்து வருகிறார்கள். வெண்ணெய் தின்ற கண்ணன் வாயை திறந்த போது உலகமே தெரிந்தது போல, செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போக போகிறார்கள் என தெரியவில்லை.
அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 10 ஆம் தேதி ரிலீஸ். அ.தி.மு.க மாநாட்டின் மெயின் பிக்சர் 20 ஆம் தேதி வெளியாகும். தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா போல அ.தி.மு.க மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.