தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.
இந்த குழுவின் கூட்டமானது இன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக முதலமைச்சரை கொண்டு இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையனும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், டி.ஆர்.பாலு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
அதாவது மத்திய அரசு சார்பில் மாநிலங்களில் பயன்படுத்தப்படக்கூடிய திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அந்த திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், "பிரதம மந்திரி சாலை திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும்.
ஊரக வேலை திட்டத்தில் தேசிய சராசரியான 52 நாட்களைவிட தமிழகத்தில் 59 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஊதிய நிலுவைத் தொகையாக ரூ.2,118 கோடி வரவேண்டியுள்ளது. மத்திய அரசின் நிதி தாமதத்தால் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் மற்றும் மாநில திட்டம், மத்திய அரசு திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்ற பாகுபாடு கிடையாது” உள்ளிட்டவற்றை பற்றி பேசி இருந்தார்.