எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும் அக்கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே ஒரு புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததைத் தொடர்ந்து, கே.ஏ. செங்கோட்டையனும் டெல்லி என்று அமித்ஷாவை சந்தித்தார்.
சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். செங்கோட்டையனின் இந்த சந்திப்புகள் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதலுக்கு மேலும், ஒரு சாட்சியாக திங்கள்கிழமை சட்டப்பேரவை கூட்டத்தின்போது, டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க-வை விமர்சிக்க யார் அந்த தியாகி என்று பேட்ச் அணிந்து வந்தனர். இதனால், சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து பேரவையில் இருந்து வெளியேற்றினார். ஆனால், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்து பேசியது அரசியலில் கவனம் பெற்றது.
இந்நிலையில், டெல்லி சென்று உள்துறை அமைச்ச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்தும் சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன் என்பது குறித்தும் கே.ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு வெளியே இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், “அ.தி.மு.க-வில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் சரியான பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். இதையடுத்து, “உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது ஏன்” என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “கட்சியின் நலனுக்காக சந்தித்தேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஜி.எஸ்.டி விவகாரம் தொடர்பாக சந்தித்தேன் என்று செங்கோட்டையன் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பற்றி பேசப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், “கூட்டணி குறித்து தலைமையே முடிவு செய்யும்” என்று கூறினார்.