அதிமுக-வுக்கு ஒரே தலைமை வேண்டுமென அக்கட்சியின் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பகீர் கிளப்பியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சியான அதிமுக, தேனி தொகுதியைத் தவிர, தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
அதோடு அதிமுக-வின் கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளும் படு தோல்வியடைந்தன.
இந்நிலையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பொதுக்குழுவில் கட்சிக்கு ஒரே தலைமையை உருவாக்குவது பற்றி வலியுறுத்துவோம். இரட்டை தலைமை இருப்பதால், முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க முடியவில்லை.
தற்போது கட்சி யாரிடம் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் முழுமையாக இணையவில்லை. ஜெயலலிதா போல் ஆளுமைத் திறன் தற்போது யாருக்குமில்லை. ஆளுமைத் திறன் மிக்க, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர் கட்சி தலைமை பொறுப்புக்கு வர வேண்டும்.
இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.
அல்லது இதைவிட சிறப்பானவர்கள், இருந்தாலும் அவர்களை பொதுச்செயலாளராக நியமிக்கலாம். நான் சொல்லும் கருத்துக்கள், கட்சியின் பிரச்சினை கிடையாது. சில இடர்பாடுகள் அதிமுகவை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கருத்தை சொல்கிறேன். அதிமுகவிலுள்ள, சின்ன சின்ன நெருடல்களால் திமுக பலன் பெற முடியாது. எந்த ஒரு அதிமுக-வினரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள்.
தினகரன் செல்வாக்கு என்பது ஒரு மாயை என்பது நடந்து முடிந்த தேர்தலில் உறுதியாகிவிட்டது. இனி இருப்பது அதிமுக - திமுக மட்டுமே. ஆக சரியான தலைமையின் வழிகாட்டுதலில் பணியாற்றினால் தான், உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.
தேர்தலில் முக்கியமான தொகுதிகளை அதிமுக இழந்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டப்படாதது ஏமாற்றத்தைத் தருகிறது.
தேனி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திரநாத் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஆனால், இடைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்கள் இதுவரை ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை. அவர்களை தடுப்பது யார்?
ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் 10 முறை அமைச்சரவை மாறியிருக்கும். புகாருக்குள்ளான அமைச்சர்கள் மாற்றப்பட்டிருப்பார்கள்.
கட்சிக்குள் நெருடல்கள் இருக்கின்றன, அவைகள் களையப்பட வேண்டும்” என்றார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.