Advertisment

O Panneerselvam vs Edappadi Palanisamy: ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் வர வேண்டும் – அ.தி.மு.க மாவட்ட கழகங்கள் தீர்மானம்

அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK general body meeting

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது.

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா்

அப்போதிருந்து கட்சியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.க்கு ஆதரவாக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஒரு சூழலில், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இருவரையும் அவரது இல்லங்களில் பல்வேறு தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார். இதுஒருபுறமிருக்க பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். ஒற்றை தலைமை பற்றி தீர்மானம்கூட கொண்டுவரக்கூடாது என்று ஓ.பி.எஸ். சொல்வதற்கு பெரும்பாலான தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரட்டைத் தலைமையுடன் இவ்வளவு நாட்கள் சுமூகமாக சென்று கொண்டிருந்த அதிமுக கட்சிக்குள் இப்போது, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை, வெடிக்கத் துவங்கி உள்ளது. அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்பது தான் இப்போது அதிமுக தொண்டர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:38 (IST) 20 Jun 2022
    ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் – பொள்ளாச்சி ஜெயராமன்

    ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும், கட்சி சிறப்பாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும் என திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


  • 20:32 (IST) 20 Jun 2022
    பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு ஒத்திவைப்பு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது, ஓபிஎஸ் பொதுக்குழுவை தள்ளிவைக்க கடிதம் எழுதியுள்ளதால், மனு காலாவதியாகிவிட்டதாக கூறப்பட்டது.

    மேலும், மனுதாரர் சூரியமூர்த்தி தரப்பில் பதட்டமான சூழலில் பொதுக்குழு கூடுவதால் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் என்றும், இரு தரப்பிற்கும் மோதல் ஏற்படும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாரிமுத்து என்பவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது அதிமுக சார்பில் பதில் மனு அளிக்க அவகாசம் கோரப்பட்டதால், இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 20:27 (IST) 20 Jun 2022
    பொதுக்குழுவில் ரவுடிகளை ஏவி கலாட்டா செய்ய திட்டம் – புகழேந்தி

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும். இல்லையென்றால் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்திந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி, பொதுக்குழுவில் ரவுடிகளை ஏவி கலாட்டா செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.


  • 18:10 (IST) 20 Jun 2022
    குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி

    டெல்லி, நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது காவல் துறையினர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் மனு அளிக்க உள்ளனர்


  • 17:27 (IST) 20 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு; ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பதிலளிக்க உத்தரவு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஈரோடு முன்னாள் நிர்வாகி தொடர்ந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை நாளை மறுநாள் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    அதேநேரம், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்து விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் நடத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  • 16:59 (IST) 20 Jun 2022
    சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாரான ஒபிஎஸ்

    சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.


  • 16:19 (IST) 20 Jun 2022
    ஒ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக பொதுக்குழுவுக்கு வருவார் - கே.பி.முனுசாமி

    ஒ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக பொதுக்குழுவுக்கு வருவார் என்று கூறியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுக்குழுவில் ஒபிஎஸ் தனது கருத்தை கூறுவார். பொதுக்குழு என்ன முடிவு செய்கிறதோ அந்த முடிவை ஒருங்கிணைப்பாளரான அவரும் ஏற்று்கொள்வார் இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்று்கொள்வார் எங்களை போன்று உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.


  • 15:58 (IST) 20 Jun 2022
    ஒபிஎஸ் கடிதம் தங்களிடம் வந்து சேரவில்லை - இபிஎஸ் தரப்பு

    அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இபிஎஸ்க்கு ஒபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தற்போதுவரை ஒபிஎஸ் கடிதம் தங்களிடம் வந்து சேரவில்லை என்று இபிஎஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.


  • 15:24 (IST) 20 Jun 2022
    உரிமையியல் நீதிமன்றத்தில் கடிதத்தை தாக்கல் செய்த ஒ.பி.எஸ்

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென ஈபிஎஸ்-க்கு கடிதம் எழுதியிருந்த ஓபிஎஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை தாக்கல் செய்துள்ளார்.


  • 14:49 (IST) 20 Jun 2022
    ஒ.பன்னீர்செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு - வைத்தியலிங்கம்

    அதிமுகவில் ஒற்றை தலைமை யார் என்பதில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், ஒ.பன்னீர்செல்வத்திற்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாக மூத்த நீர்வாகி வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.


  • 14:14 (IST) 20 Jun 2022
    23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்' - கே.பி.முனுசாமி பேச்சு

    "வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைக்கப்பட்டுள்ளார்கள்" என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


  • 13:53 (IST) 20 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ் தரப்பு டிஜிபியிடம் மனு!

    அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டள்ளது. ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பிரிவு தமிழக டி.ஜி.பி.யிடம் இன்று மனு கொடுத்துள்ளார்.


  • 13:30 (IST) 20 Jun 2022
    ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியின் தலைவர் - புகழேந்தி!

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியின் தலைவர். எடப்பாடி தரப்பு தான் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதாக தகவல். ஓபிஎஸ் அழைத்தால் மீண்டும் அதிமுகவில் இணைவேன்" என அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.


  • 13:18 (IST) 20 Jun 2022
    பொதுக்குழுவை தள்ளிவைக்க ஓ.பி.எஸ். கடிதம்; நடத்த இ.பி.எஸ். முடிவு!

    பொதுக்குழுவை தள்ளிவைக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள நிலையில், பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


  • 13:04 (IST) 20 Jun 2022
    பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை கோரிய மனு - பிற்பகல் விசாரணை!

    அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று பிற்பகல் விசாரணை செய்கிறது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.


  • 12:55 (IST) 20 Jun 2022
    பொதுக்குழுவை தள்ளி வைக்க இ.பி.எஸ்க்கு ஓ.பி.எஸ் கடிதம் - வைத்தியலிங்கம் பேச்சு!

    “அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


  • 12:54 (IST) 20 Jun 2022
    பொதுக்குழுவை தள்ளி வைக்க சொல்லி இ.பி.எஸ்க்கு ஓ.பி.எஸ் கடிதம்; வைத்தியலிங்கம் தகவல்!

    "அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

    மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.


  • 12:16 (IST) 20 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டம்: நிர்வாகிகள் ஆய்வு!

    அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


  • 11:36 (IST) 20 Jun 2022
    ஓ.பி.எஸ், இ.பி.எஸ் 7வது நாளாக ஆலோசனை!

    அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து, ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக 7வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், இபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


  • 11:34 (IST) 20 Jun 2022
    அமைச்சர் பெஞ்சமின் மனுத்தாக்கல்!

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


  • 11:26 (IST) 20 Jun 2022
    ஜெயக்குமார் பேட்டி!

    இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் தலைமையேற்க வேண்டும் என்று கூறவில்லை. நான் ஓ.பி.எஸ். பக்கமும் இல்லை, இ.பி.எஸ். பக்கமும் இல்லை. ஒற்றை தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.


  • 11:12 (IST) 20 Jun 2022
    இ.பி.எஸ் பதவி ஏற்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

    அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக மாநில இணைச் செயலாளர் வையாபுரி தலைமையில், முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


  • 09:38 (IST) 20 Jun 2022
    அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம்..

    சென்னை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “திமுகவை உறுதியோடு எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம். அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்தார்.


  • 09:37 (IST) 20 Jun 2022
    அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம்..

    சென்னை எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை அக்கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “திமுகவை உறுதியோடு எதிர்க்க அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம். அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலத்தின் கட்டாயம்” என்று தெரிவித்தார்.


  • 09:36 (IST) 20 Jun 2022
    இ.பி.எஸ் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார்..

    அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும். தமிழக மக்களுக்கு 4 ஆண்டு நல்லாட்சியை கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.


Tamilnadu Ops Eps Aiadmk Ops Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment