அதிமுகவின் செய்தித்தாளான 'நமது அம்மா' பாஜகவின் வேல் யாத்திரையை விமர்சித்ததால் ஆளும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் இடையிலான மோதல்கள் விரிவடைந்துள்ளது. மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் வேல் யாத்திரை பேரணி உள்ளதால் அனுமதிக்கப்படாது என்று நமது அம்மா செய்தித்தாள் விமர்சனம் செய்துள்ளது.
‘அது கருப்பர் கூட்டமானாலும் சரி அல்லது காவிக் கொடி பிடிப்பவர்களானாலும் சரி’ என்ற தலைப்பில் அதிமுகவின் நமது அம்மா செய்தித்தால் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களன்றி வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கு உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
ஓம், ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி நிறைவுகொள் என்பதாகும். அதுபோலவே, ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தம் அமைதி கொள் சாந்தமடை என்பதாகும். அது போலவே இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதை உணர்த்துகிறது.
இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும் அன்பையும் சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்ல விழைபவர்கள் உணரவேண்டும்.
அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவிக் கொடிபிடிப்பவர்களானாலும் சரி.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் -19 வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக வகுப்புவாத பதட்டம் சாத்தியம் உள்ளதாலும் இவற்றைக் கருத்தில் கொண்டு அதிமுக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளிடமிருந்து பல எதிர்ப்புகள் வந்ததாலும் வேல் யாத்திரைக்கு எதிராக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல வழக்கு உள்ளதாலும் அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவிப்பதற்கான காரணங்களாக அமைந்தது. இருப்பினும், பா.ஜ.க தலைவர்கள் கடவுள் முருகன் தங்களுக்கு அனுமதி அளித்து யாத்திரை நடத்தியதாக கூறினர். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நிலையான விதிமுறைகளை மீறியதற்காக நீதித்துறை காவி கட்சி மீது கடுமையாக விமர்சனம் வைத்தது.
ரத யாத்திரைகளை மாதிரியாகக் கொண்டு முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளை பார்வையிட்டு ஒரு மாத கால பேரணி பாஜகவால் திட்டமிடப்பட்டது. நவம்பர் 6ம் தேதி வட தமிழகத்தில் உள்ள திருத்தணியில் தொடங்கி தென் தமிழகத்தில் உள்ள திருச்செந்தூரில் வேல் யாத்திரையை முடிக்கும் விதமாக பாஜக திட்டமிட்டது. இது தமிழகத்தில் இந்து வாக்குகளை ஒன்றிணைப்பதற்கு பாஜக மேற்கொள்ளும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"