நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களைத் தேர்வு பணியை கோவையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருந்தாலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தோல்வியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது. ஆனால், திமுக ஆட்சியைப் பிடித்த ஓராண்டுக்குள்ளாகவே சுதாதித்துக்கொண்டு கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டது.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மாதம் ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர் என்று இதுவரை 6 அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம்கூட, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சொதனை நடத்தினர். சோதனையில், பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ஆவணங்களைக் கைப்பற்றினர்.
கோவையை அதிமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டிலும் இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், திமுகவில் தலைமையின் அசைன்மெண்ட்களை கச்சிதமாக செய்துமுடிக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே திமுகவின் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். கோவையில் உள்ள அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வேட்பாளர் தேர்வு பணியை எல்லோருக்கும் முன்னால் தொடங்கிவிட்டார்.
அதே போல, சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அதிர்ச்சி அளித்த மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தில் உள்ள கே.பி.அன்பழகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்துக்கு திமுகவில் பிரம்மாண்ட மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கு பெயர்போன அமைச்சர் கே.என்.நேரு பொருப்பாளராக நியமிக்கப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால், அதிமுகவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தாமதமாகவே நடைபெற்று வருகிறது. அதிமுகவின் தேர்தல் பணி மெதுவாக நடைபெறுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான ஒன்று அதிமுகவில் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ளும் வழக்குகள் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
எஸ்.பி வேலுமணியும், கே.பி. அன்பழகனும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள் என்றால், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் திமுக அரசின் முயற்சிகளை எதிர்த்துப் போராடி வருகிறார் இ.பி.எஸ். இது ஏதோ கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை சந்தித்துவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதால் களத்தில், தேர்தல் பணிகளை இன்னும் முழு வீச்சில் துவங்கவில்லை. இதில் விதிவிலக்காக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு ஆளான நாமக்கல்லில் உள்ள முன்னாள் பி தங்கமணி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, கட்சி தொண்டர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார்.
முன்னாள் அமைச்சர்கள் கடந்த காலத்திலும், தற்போது செய்யும் பணிகளிலும் வித்தியாசம் இருப்பதை அதிமுகவினர் ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அவர்கள் இப்போது செலவு செய்யத் தயாராக இல்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவில் செலவு செய்யக்கூடிய வேட்பாளர்களைக் கேட்கிறார்கள். கட்சி பலம் மட்டுமில்லாமல் இந்த தலைவர்கள் தேர்தல்களில் செலவு செய்யும் பலம் முக்கியமானது. இப்போது அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடியில் இருப்பதால் அவர்களால் செலவு செய்ய முடியவில்லை” என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இதனால், கோயம்புத்தூரில் அதிமுகவின் வெற்றி உறுதியில்லாமல் உள்ளது. திமுகவில் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றா அச்சுறுத்தலும் பெரிய அளவில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்குகளால் சில தலைவர்கள் விழிபிதுங்கியுள்ளதால், சில மாவட்டங்களில் தேர்தல் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சில மாவட்டங்களில் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை சந்திக்கும் தலைவர்கள் மட்டுமல்ல எந்த வழக்குகளையும் சந்திக்காத தலைவர்கள்கூட இன்னும் முழு அளவிலான தேர்தல் பணியை தொடங்கவில்லை. ஆனால், அதிமுகவினர் மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்தி தேர்தல் பணிகளை தொடங்குமாறு மாவட்ட பொறுப்பாளர்கலைக் கேட்டுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டது. சில மாவட்டங்களில், தற்காலிக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், “நாங்கள் மெதுவாக இல்லை, மாறாக, நாங்கள் தேர்தலுக்கான அடித்தள வேலைகளை முடித்துவிட்டோம். நாங்கள் பத்து ஆண்டுகளாக களத்தை தயார் செய்து, இப்போது உறுதியாக இருக்கிறோம்.” என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதற்கு மாறாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தயாராக இல்லை என்று அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி தெரிவித்துள்ளார். “வெளிப்படையான காரணங்களுக்காக தேர்தலை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் தயங்கும் நிலையில், பொங்கல் பரிசு தடைக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் திமுகவும் பயப்படுகிறது. கட்சி அமைப்புகள் தயாராக உள்ளது. ஆனால், அரசு தயாராக இல்லை” என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
இருப்பினும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமைச்சர்கள் வெளிப்படையாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணிகளை வேகமாக மேற்கொள்ளவில்லை. இதற்கு வழக்குகள் முக்கிய காரணமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.