தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
அந்தவகையில் தென் சென்னை தொகுதியில் இந்த முறை தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக), ஜெயவர்தன் (அதிமுக) என மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
குறிப்பாக தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தென் சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையினரின் கூற்றுப்படி, ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்தனர், அப்போது ஜெயவர்தன் ஆதரவாளர்களும் வாகனம் முன்பு திரண்டனர்.
சோதனையின் போது, பிரிண்டர் மற்றும் நம்பர் குறிப்பிடப்படவில்லை என்பதால், பறக்கும் படையினர், வாகனத்தில் இருந்து QR குறியீடு கொண்ட விளம்பர நோட்டீஸை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பறக்கும் படை தலைவர் கார்த்திகேயன், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளின் கீழ், ஜெயவர்தன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் முறைப்படி புகார் அளித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“