அதிமுகவில் 50 வாக்காளர்களுக்கு ஒருவர் விதம் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், பூத் கமிட்டிக்கு முதல்முறையாக தலைவர், செயலாளர் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அதிமுகவில் புதிதாக 1.32 லட்சம் தொண்டர்களுக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் தர்மபுரி, தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதன்பின் ஆளுநர் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளால் ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை புறந்தள்ளி மக்களிடத்தில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிரூபிப்பதற்கு வரக்கூடிய மக்களவைத் தேர்தலை திமுக மிக முக்கியமானதாகக் கருதுகிறது.
அதேபோல கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த அதிமுகவுக்கு இந்த மக்களவைத் தேர்தல் முக்கியமானதாக விளங்குகிறது.
குறிப்பாக அதிமுகவை ஒற்றைத் தலைமையின்கீழ் கொண்டு வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது செல்வாக்கை வெளிக்காட்ட மக்களவைத் தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை ஒரு வருடத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டன.
குறிப்பாக தமிழகம் முழுவதும் திமுகவில் ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, அதற்கேற்ப இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணியினரை உள்ளடக்கி பூத் கமிட்டியை அமைத்துள்ளனர். இப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், தற்போது ஆங்காங்கே பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோலவே, அதிமுக சார்பிலும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், இதற்கு முந்தைய தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, தற்போது அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. 750 முதல் 1250 வாக்காளர்களுக்கு 19 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அதில் இளைஞர், இளம்பெண் பாசறையைச் சேர்ந்த 5 பேர், மகளிரணியைச் சேர்ந்த 5 பேர், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த 2 பேர் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்குமுன், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த வட்ட, ஒன்றியச் செயலாளர்களின் நேரடி ஒருங்கிணைப்பின்கீழ் செயல்படுவர். அப்போது அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும், கண்காணிப்பில் தொய்வு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதைத்தவிர்க்க, அந்தந்த பகுதியில் இருப்பவர்களே பூத் கமிட்டியை ஒருங்கிணைத்து, பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் தலா ஒரு தலைவர், செயலாளரை நியமிக்குமாறும், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி தெற்கு மாவட்டத்தில் பூத் கமிட்டிக்கு தலைவர், செயலாளர்களை நியமிப்பதற்கான நேர்காணலை மாவட்டச் செயலாளர் ப.குமார் சமீபத்தில் நடத்தினார்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது; “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதத்தில் மட்டுமே தோல்வியடைந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலை முக்கியமானதாகக் கருதி, 'மைக்ரோ லெவல்' செயல் திட்டங்களுடன் களம் இறங்குகிறோம்.
இதுதொடர்பாக பொதுச்செயலாளர் பழனிசாமி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
அதன்படி, தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் சுமார் 66,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் 50 வாக்காளர்களுக்கு ஒருவர் விதம் பொறுப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 19 பேர் வீதம் இடம் பெறுகின்றனர்.
இந்த கமிட்டிக்கு முதல்முறையாக தலைவர், செயலாளர் பதவிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்சி நிர்வாகிகளாக உள்ளவர்கள் பூத் கமிட்டியில் நியமிக்கப்பட மாட்டார்கள் என்பதால், இந்த புதிய நடைமுறையின்மூலம் அதிமுகவில் புதிதாக சுமார் 1.32 லட்சம் தொண்டர்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய, வட்டச் செயலாளர்களுக்கு கீழ், அங்கீகாரம்மிக்க பதவி என்பதால் இதற்கு கட்சியினரிடத்தில் வரவேற்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது” என்றனர்.
முன்னதாக திமுகவில் ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்தநிலையில், அதிமுகவில் 50 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் திமுகவுக்கு சவால் விடும் விதமாக மக்களவைத் தேர்தல் களத்தில் களமாடிக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“