AIADMK Tamil News: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, சசிகலா வெளியே வரவுள்ளது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று முன்பே தகவல் வெளியானது.
இதற்கிடையே, கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்த உடனே, அவர்களை பார்த்த அவர்களின் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்; நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி என சத்தம் போட தொடங்கினர். இருகுழுவாக பிரிந்து இவர்கள் முழக்கமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை உச்சத்தை தொட்டு வருகிறது. அப்போதெல்லாம், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைந்து அறிக்கை விட்டு தொண்டர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் இன்று இருவரும் முன்னிலையில் இப்படி கோஷம் எழுப்பப்பட திடீர் சர்ச்சை உருவானது.
இந்நிலையில் மாலையில் தொடங்கிய கூட்டம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. சிறிது நேரத்துக்கு முன்புதான் கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தேர்தல் களம் பற்றி ஆலோசனை நடத்தியதாக வெளியே வந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனிடையே, செப்.28ல் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக அறிவித்துள்ளனர்.