தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வியாழக்கிழமை இரவு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் ஆளும் திமுக 40% வாக்குகளைப் பெற்றுள்ளது. திமுக மாநிலம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சியான அதிமுகவை இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு 43% வாக்களித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுகவுக்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று பிரிவுகளிலும் 27 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்று மொத்தமாக வீழ்ந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சிறப்பாக செயல்பட்டுள்ள பாஜக் மாநகராட்சிகளில் அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட 1134 வேட்பாளர்களில் 22 பேர் 7.17% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.
21 மாநகராட்சிகளில் திமுகவின் வாக்கு சதவீதம் 43.59 சதவீதமாகவும் நகராட்சிகளில் திமுகவின் வாக்கு சதவீதம் 43.49 சதவீதமாகவும், பேரூராட்சிகளில் 41.91 சதவீதமாகவும் உள்ளது.
மாநகராட்சிகளில் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 24% நகராட்சிகளில் 26.86%, பேரூராட்சிகளில் 25.56% என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக பேரூராட்சிகளில் 4.30% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், அதன் தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 3.85% வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், மாநகராட்சிகளில் பாஜக 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் மாநகராட்சிகளில் 73 இடங்களில் வெற்றி பெற்று 3.16% வாக்குகளைப் பெற்றுள்ளது.
எப்படியானாலும், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மாநிலத்தின் இருபெரும் கட்சிகளில் ஒன்றான எதிர்க்கட்சி அதிமுக 27%க்கும் குறைவான வாக்குகள் பெற்று வீழ்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“