அ.தி.மு.க தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும் வரை அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என அளிக்கப்பட்ட மனு தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் டிசம்பர் 19-ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அ.தி.மு.க உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், சூரியமூர்த்தி தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சூர்ய மூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதில் இ.பி.எஸ் ,ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அ.தி.மு.க தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும் வரை அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என அளிக்கப்பட்ட மனு தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் டிசம்பர் 19-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள தேர்தல் அணையத்தில் டிசம்பர் 23-ம் தேதி நேர்ல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“