கடந்த தேர்தல்களைவிட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனது கொங்குமண்டலக் கோட்டையில் குறைவான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை திமுக அசைத்துவிட்டதா என்பது குறித்து பார்ப்போம்.
தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என்று ஒட்டுமொத்தமாக மாவட்டங்களை இரு பிரிவாக கூறினாலும், கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிற மேற்கு மாவட்டங்கள் எப்போதும் அரசியல் ரீதியாக தனித்துவமாக இருந்துவந்துள்ளன.
தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சியின் நீட்சியாக உருவான திமுக தமிழக அரசியலில் பிரமாணர் அல்லாதோர் சமூகங்களின் திரட்சியாகி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் அந்த தொகுப்பில் இருந்த அனைத்து சமூகங்களுக்கும் அதிகாரத்தில் பதவிகள் கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது, திமுக முழுமையாக கையில் எடுக்காத சமூகங்களும் திமுகவில் அரசியல் ரீதியாக உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத சமூகங்களும் திரண்டன. அந்த வகையில், கொங்குமண்டலம் என்றும் மேற்கு மாவட்டங்கள் என்றும் அழைக்கப்படுகிற கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் பெரும்பாண்மையாக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் திரண்டனர்.
அன்றைக்கு கொங்கு பகுதியில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்தவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். அது முதல் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையானது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாவும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாகவே தக்கவைத்து வந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அடுத்தடுத்து அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். 2016 சட்டமன்ற தேர்தலில் கொங்குமண்டலத்தில் இருந்து மட்டும் அதிமுக சார்பில் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், தமிழக அமைச்சரவையில் முக்கிய துறைகளில் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கும் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர்களும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் உள்ளனர்.
இருப்பினும், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுகவில் கவர்ச்சிகரமான ஒரு பிம்பமாக தலைவர்கள் யாரும் இல்லாததாலும், பாஜக அதிருப்தி அலையாலும், கடந்த மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற்றது.
அப்போதே அதிமுகவின் கொங்குமண்டலக் கோட்டையில் விரிசல் விழுந்துவிட்டது என்று கூறலாம். இந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த விரிசல் அதிமுகவுக்கு கவலை அளிக்கக்கூடிய வகையில் இன்னும் பெரிய அளவாக மாறியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் இருந்து எடப்படி பழனிசாமி முதலமைச்சராகியுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தங்கள் செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ள அதிமுக கடுமையாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே நேரத்தில், திமுக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை பொய்யாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு தொடக்கமாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தாராளமாக ஒரு தொகுதியை வாரி வழங்கி வெற்றி பெறச் செய்தது. இதன் மூலம் கிடைத்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலில் திமுக கடுமையாக பணியாற்றி கொங்கு மண்டல உள்ளாட்சியை கைப்பற்ற முயற்சித்தது.
தற்போது நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. கொங்கு மண்டலத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவுக்கு 456 இடங்கள் கிடைத்துள்ளன. திமுகவுக்கு 446 இடங்கள் கிடைத்துள்ளன. இது திமுகவுக்கு கிடைத்த வெற்றிதான். 10 இடங்கள் வித்தியாசம் என்ற அளவில்தான் அதிமுக நூலிழையில் கொங்கு மண்டலத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன் மூலம் கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை திமுக பலமாக அசைத்துப் பார்த்துள்ளது என்று கூறலாம்.