IETAMIL Exclusive
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு, முதல்வர், துணை முதல்வர் தரப்பில் இருந்து இரங்கல் கூட தெரிவிக்கப்படாத நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.நடராஜ் ஐபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உ.பி.ச சசிகலா. இவரது கணவர் எம்.நடராஜன். கடந்த 20ம் தேதி எம்.நட்ராஜன், மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலில் செலுத்தினர். திமுக செயல்தலைவர் மட்டுமல்லாது, திமுக எம்.எல்.ஏ.க்களும் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலாவால் முதல் அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இரங்கல் செய்தி கூட அனுப்பவில்லை. இது அரசியல் அரங்கில் புருவத்தை உயர வைத்துள்ளது.
நடராஜன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘முதல்வரோ, துணை முதல்வரோ இரங்கல் கூட தெரிவிக்காதது, நாகரிகமில்லாத செயல். மொழிப் போர் தியாகி என்பதற்காகவோ அல்லது இலக்கியவாதி என்பதற்காவது இரங்கல் தெரிவித்து இருக்கலாம்’ என்று சொல்லியிருந்தார்.
இதற்கு பதிலளித்த, அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘அந்த குடும்பத்தோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றான பின்னர் ஏன் இரங்கல் சொல்ல வேண்டும்’ என்று எதிர் கேள்வி கேட்டார்.
ஆனால், நடராஜன் மறைவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவர்கள் அனைவரும் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து டிடிவி.தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தவர்கள். இவர்கள் வந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை.
ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைத்தவர் முன்னாள் டிஜிபியும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். எம்.நடராஜன் குடியிருக்கும் தெருவில்தான் ஆர்.நடராஜ் வசித்து வருகிறார். அதிமுகவில் பிளவு உருவான போது, அவர் சசிகலா தரப்புக்கும் ஆதவில்லை. ஓபிஎஸ் தரப்புக்கும் ஆதரவில்லை என்று சொல்லி ஒதுங்கியிருந்தார். சசிகலா ஆதரவோடு எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராகி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது எதிராக வாக்களித்தார். எடப்பாடியும், ஓபிஎஸ் இருவரும் இணைந்த போது, அவர்களோடு சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார்.
சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக இருந்த ஆர்.நடராஜ், அஞ்சலி செலுத்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்த போதும் கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று, அஞ்சலி செலுத்தக் கூட செல்லாத நிலையில் ஆர்.நடராஜ் சென்றது கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.