தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக சீட் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் விரைவில் வார்த்தை தொடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் புதன்கிழமை அறிவித்தார். இதையடுத்து, அரசியல் கட்சிகள் சீட் பங்கீடு வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் பரபரப்பாகி உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான அதிமுக, சீட் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை இன்னும் ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அடுத்த வாரத்தில் காலியாக உள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் என அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிகள் காரணமாக அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரவதற்கான அவகாசத்தையும் மாநிலத் தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. இருப்பினும், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வியூகங்களை வகுப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஏற்கனவே தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினருடன் மூன்று சுற்று கூட்டங்கலை நடத்தி முடித்துள்ளார். அதே போல, எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ் சேலம் மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். மேலும், சென்னை, விழுப்புரம், மதுரை, கோவை மாவட்டச் செயலாளர்களும் முதல்கட்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை முடிந்துவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, அதிமுக கூட்டணி கட்சியான, பாஜகவில் மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், அதிமுக, சீட் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக மாவட்ட செயலாலர்களின் கூட்டத்தை நடத்திய பின்னர், வேட்பாளர்களை அறிவிக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”