/tamil-ie/media/media_files/uploads/2020/08/aiadmk-eps-ops-1.jpg)
அதிமுக செயற்குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் இன்று (செப்.28) நடக்கிறது. கூட்டத்துக்கு முன்னதாகசிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். அந்த சிக்கல்களுக்கான தீர்வை செயற்குழு கூட்டத்தில் அறிவித்து அதற்கான ஒப்புதலை பெற வேண்டும் என்பதே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரின் முடிவாக உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை அதிமுக செயற்குழு கூடுகிறது. இந்த செயற்குழு கூட்டம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், பொதுச் செயலாளர் யார் என்பதை தீர்மாணிக்கும் என்பதால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுகளை திரட்டிவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவில் என்னென்னவோ நடந்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். சிறிது நாட்களிலேயே, சசிகலா முதல்வராவதற்காக ஓ.பி.எஸ் இடம் இருந்து ராஜினாமா கடிதம் பெற்றார். ஆனால், ஓ.பி.எஸ். ஜெ.நினைவிடத்தில் தர்மயுத்தத்தை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எச்.க்கு 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் அழைத்துச் சென்று தனது பலத்தை உறுதி செய்தார். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால் அவர் சிறை சென்றார். அதற்கு முன்பு, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.
சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி தினகரன், கட்சியிலும் ஆட்சியிலும் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க அவரை கட்சியில் இருந்து வெளியேற்றினார். ஆர்.கே.நகர் தேர்தலில் வென்ற டிடிவி தினகரன், அதன் பிறகு, அமமுக கட்சியைத் தொடங்கினார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமியும் தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் இருவரும் ஒன்றாக இணைந்தனர். ஓ.பி.எஸ். துணை முதல்வராகவும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆனார். முதல்வர் இ.பி.எஸ் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரானார். ஓ.பி.எஸ் ஆதரவாளர்களில் மாஃபா பாண்டியராஜனுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியைத் தக்கவைக்கத் தேவையான இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சீட் வழங்க அவர் வெற்றியும் பெற்றுவிட்டார்.
ஆட்சி பலம் அடைந்த இந்த இடைப்பட்ட காலங்களில், ஓ.பி.எஸ்-க்கும் இபிஎஸ்-க்கும் இடையேயான பூசல்கள் அதிகரித்து வந்தன. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான திமுகவில் காலியாக இருந்த பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளை நிரப்பியது. திமுகவில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்று எல்லா தலைவர்களும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதோடு, திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
ஆனால், ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சிலர் கூற, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் தான் என்று கூற புகைச்சல் பூசலானது. இதையடுத்து, அமைச்சர்கள் முதல்வர் இ.பி.எஸ்-க்கும் துணை முதல்வர் ஈ.பி.எஸ்-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
ஆனாலும், தேர்தலுக்கான காலம் நெருங்கிவர வர அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்றும் முடிவு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில் இருந்து சசிகலா விடுதலையானால், அவரால் ஏற்பட உள்ள நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டிய சூழல் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில்தான், அதிமுகவின் செயற்குழு செப்டம்பர் 28-ம் தேதி கொரோனா காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, அதிமுக அவசர உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்.க்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.
அதே நேரத்த்தில், ஓ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தபோது, கட்சியில் வழிகாட்டு குழு அமைப்பது தொடர்பாக பேசப்பட்டது. அந்தக்குழு ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்று ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், பொதுச் செயலாளர் யார் என்ற கேள்விகளையொட்டி இ.பி.எஸ்.க்கும் ஓ.பி.எஸ்.க்கும் ஏற்பட்டுள்ள மோதல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ஏற்கெனவே, ஆட்சியிலும் கட்சியிலும் தனக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருத்தப்பட்டு வந்த ஓ.பி.எஸ் இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியில் தனது செல்வாக்கை நிரூப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால், அதிமுகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். அதிமுக செயற்குழு அவைத் தலைவர் தலைமையில்தான் நடைபெறும் என்பதால் ஓ.பி.எஸ் அவைத் தலைவர் மதுசூதனனை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதோடு, அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் நுகர்வோர் துறை பாதுகாப்பு சார்பில், நகரும் அம்மா நியாயவிலைக் கடைகளை முதல்வர் இ.பி.எஸ் தொடங்கிவைத்தார். இதில், துணை முதல்வரும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். முன்னதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து பூங்கொத்தும் புத்தகங்களும் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளனர். இந்த சந்திப்பும் ஓ.பி.எஸ் ஆதரவு திரட்டும் சந்திப்பு என்று கூறப்படுகிறது.
துணை முதல்வர் ஓ.பி.எஸ். இப்படி ஆதரவு திரட்டுகிறார் என்றால், முதல்வர் இ.பி.எஸ்சும் தனக்கான ஆதரவு திரட்டுவதை அமைச்சர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார். ஓ.பி.எஸ்.க்கு பாஜக தலைமை ஆதரவு இருக்கிறது என்பதால் அந்த வழியில் அவரை சரிகட்ட வேண்டும் என்று காய் நகர்த்தியுள்ளார். இ.பி.எஸ். ஆதரவு அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் பெங்களூரு வழியாக விமானத்தில் டெல்லி சென்று அங்கே முக்கிய பாஜக தலைவர்களை ரகசியமாக சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். டெல்லியில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலையும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்துள்ளனர். அங்கே அவர்கள் பாஜக ஓ.பி.எஸ்ஸை சமாதானப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் கூறுகின்றனர். டெல்லியில் இருந்து சென்னை வந்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி இருவரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகு, வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அமைச்சர்களின் நடவடிக்கையை அறிந்த ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவான டெல்லி பாஜக தலைவர்களையும் மகன் ரவீந்திரநாத்திடமும் அமைச்சர்களின் டெல்லி நடவடிக்கைகளை கண்காணித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படி, அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனக்கான ஆதரவை திரட்டிவர, மற்றொரு புறம் முதல்வர் இ.பி.எஸ். தனக்கான ஆதரவை திரட்டிவருகிறார்.
இந்த சூழலில்தான் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நாளை (செப்டம்பர் 28) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என 300 பேர் வர உள்ளனர். செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஓ.பி.எஸ் செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. யார் எப்படி காய் நகர்த்தினாலும், செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, யாருக்கு ஆதரவு அதிகம் என்ற முடிவு தெரியவரும். அவரே கட்சியின் தலைமையாகவும் முதல்வர் வேட்பாளராகவும் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.