/indian-express-tamil/media/media_files/2025/09/09/sengottaiyan-delhi-bjp-admk-amit-shah-nirmala-sitharaman-tamil-news-2025-09-09-16-28-24.jpg)
'கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கினால்?'... 'அமைதியாக இருப்பேன்' - செங்கோட்டையன் பேட்டி
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகின்றன. அதோடு ஒவ்வொரு கட்சியில் உள்ள உட்கட்சி பூசலும் உச்சத்தை எட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார் அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். இந்த ஒருங்கிணைப்பு பணியை செய்ய செய்யாவிட்டால், அதை தானே எடுத்து செய்வேன் எனவும் கூறியிருந்தார்.
அவரது கருத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து கெடு விதித்த இரண்டே நாளில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை பறித்து உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையே, செங்கோட்டையன் சமீபத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் டெல்லி சென்று வந்தது தகவல் வெளியானபோது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல அமைச்சர்களை சந்தித்ததாகவும், கட்சி நிலைமைகள் குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார். ஆனால், மத்திய அமைச்சர்கள் யாரும் இதுவரை இந்தச் சந்திப்பு குறித்து வெளிப்படையாக எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை. இதனால், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கோவையில் இருந்து பயணிகள் விமானத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அ.தி.மு.க. ஒன்றாக இணைய வேண்டும் என்று நீங்கள் விடுத்த கெடு, 2 நாளில் முடிய உள்ளதே என்ற கேள்விக்கு, ‘நல்லதை நினையுங்கள். நல்லதே நடக்கும்’ என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திப்பீர்களா? என்றதற்கு, இதுவரை சந்திக்கவில்லை. அவர்களும் சந்திக்க, என்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், உங்களை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கினால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, அமைதியாக இருப்பேன் என்று கூறிவிட்டு சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.