மதுரையில் எய்ம்ஸ் அமைய ஒப்புதல் தரவில்லை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் தலைவர் ஹக்கீம் என்பவர், மதுரை தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எட்டு கேள்விகளை எழுப்பி ஆர்டிஐ விண்ணப்பித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதுவரை ஒரு பைசா நிதி கூட எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒதுக்கவில்லை என்றும், மருத்துவமனை கட்டடங்கள் அமைக்க இதுவரை டெண்டர் விடவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இது சாதாரண திட்டம் இல்லை. 1000 - 2000 கோடி வரையிலான பெரிய திட்டம் இது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்த்துள்ளது. தற்போது மத்திய அரசு விரிவான வரைவு அறிக்கையை தயார் செய்து வருகிறது. அதன் பின் அனைத்து நடைமுறைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, முறைப்படி மத்திய அரசு அனுமதி தரும். அதுமட்டுமின்றி, நானும் சுகாதாரத்துறை செயலாளரும், வரும் 9 ம் தேதி டெல்லிக்கு சென்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா அவர்களை சந்தித்து, இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்த உள்ளோம்" என்றார்.
அதைத் தொடர்ந்து பதிலளித்த தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றிவிட்டோம். இனி செயல்படுத்துவது மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை. இது பெரிய புராஜக்ட். மத்திய அரசு கால அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது. தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் இத்திட்டம் நிறைவேறும்" என்றார்.