தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிகத்தது. இதற்காகத் தமிழக அரசு மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிபட்டி, பெருந்துறை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. எய்ம்ஸ் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக அமைச்சர்களுக்குள்ளேயே போட்டி இருந்தது. இந்த அறிவிப்பை தொடந்து தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் சொந்த தொகுதிக்குள்ளேயே எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், மத்திய அரசின் குழு மதுரை மற்றும் தஞ்சையை தவிர மற்ற 3 இடங்களையும் நிராகரித்தது.
அதிமுக காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட அமைச்சர் உதயகுமார், அதிமுக அரசின் வெற்றிகள் குறித்து பேசினார். அப்போது, “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஒப்புதல் அளித்து மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார இயக்குநர் சஞ்சய் ராய் எனக்கு சற்றுமுன் தகவல் அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் அமையும் போது அது தென்னாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது அ.தி.மு.க அரசுதான். இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி.” எனப் பேசினார்.
கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மற்றும் தஞ்சை ஆகிய இரண்டு இடங்களில், எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற குழப்பத்திற்கான விடையாக அமைந்துள்ளது அமைச்சர் உதயகுமாரின் தகவல்.