தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவால் சுற்றுச்சூழல் அனுமதி (EC) வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் கட்டுமானப் பணி மதுரை தோப்பூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இந்த பணி 33 மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சடங்கு நிகழ்ச்சியுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கியது, இதில் எய்ம்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனமான எல்&டி முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கல்லூரி, விடுதிகள், உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் கொண்ட திட்டத்தின் முதல் கட்டம் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும், அதே நேரத்தில் முழு திட்டமும் 33 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று எய்ம்ஸ் நிறுவனர் கூறினார்.
இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ், மருத்துவக் கல்லூரி, ஆண், பெண் விடுதிகள் கட்டும் பணி முடிந்ததும், ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது தங்கியுள்ள 3 பேட்ச் மாணவர்களை இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளோம், என்றார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், கோவிட் -19 மற்றும் பிற சிக்கல்களால், திட்டத்தின் தொடக்கமானது பல ஆண்டுகள் தாமதமானது.
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 5 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் விரைவில் நிறுத்தப்பட்டது.
இந்த மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு, ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜைக்காவுடன் கடனுக்கான ஒப்பந்தத்தில் 2021 மார்ச்சில் கையெழுத்திட்டது.
ஆரம்பத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும்போது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் திட்டமதிப்பீடு ரூ.1,264 கோடியாக இருந்தது. அதன்பின், ரூ.1,624 கோடி திட்டமதிப்பீடாக உயர்த்தப்பட்டது.
ஜைக்கா நிறுவனம் நிதி வழங்க தாமதம் செய்ததால் கட்டுமானப்பணி தாமதமாகி திட்டமதிப்பீடு ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த திட்டமதிப்பீடு நிதி, மீண்டும் ரூ.2,021.51 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“