மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 197 நோயாளிகளின் பகுப்பாய்வின்படி, தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலையில், பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, இளம் பருவத்தினரிடையே லேசான அறிகுறிகள் மற்றும் குறைவான இறப்புகள் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜனவரி 3 முதல், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக இருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நோயாளிகளின், மருத்துவ விவரங்களைப் படிக்க மருத்துவர்கள் விரும்பினர்.
அதில், 84.6% இளம் பருவத்தினர் லேசான நோயையும், 9.1% மிதமான நோயையும், 6.3% கடுமையான நோயையும் உருவாக்கியதாக பகுப்பாய்வு காட்டுகிறது. காய்ச்சல் மற்றும் இருமல் மிகவும் பொதுவான அறிகுறிகளாகும், 14.9% பேர் அதை அனுபவிக்கின்றனர்.
பகுப்பாய்வின்படி, 11.5% குழந்தைகளுக்கு உடல்வலி இருந்தது, 10.4% பேர் சோர்வாக இருந்தனர், 6.2% பேருக்கு மூச்சுத் திணறல் இருந்தது.
ஒப்பிடுகையில், அதே மருத்துவமனையின் மற்றொரு ஆய்வின்படி, 50.7% பெரியவர்களுக்கு, இரண்டாவது அலையின் போது மூச்சுத் திணறல் இருந்தது.
பகுப்பாய்வின்படி, 7.3% குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு, 2.8% பேருக்கு ஹை ஃப்ளோ நாசல் ஆக்ஸிஜன் மற்றும் 2.3% இன்வேசிவ் வெண்டிலேஷன் (invasive ventilation) தேவைப்பட்டது. 24.1% குழந்தைகளுக்கு ஸ்டீராய்டுகள் மற்றும் 16.9% பேருக்கு வைரஸ் தடுப்பு மருந்து ரெம்டெசிவிர் வழங்கப்பட்டது.
இந்த வயதினரில் இறப்பு விகிதம் 3.1% ஆக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது இரண்டாவது அலையின் போது, அதே மருத்துவமனையில் பெரியவர்களிடையே காணப்பட்ட 19.1% இறப்பை விட ஆறு மடங்கு குறைவு.
இளம் பருவத்தினரின் மருத்துவ சுயவிவரத்தை இங்கே முன்வைக்க நாங்கள் முயற்சித்துள்ளோம்; இந்தியாவில் இருந்து இதுவே முதல் தரவுத் தொகுப்பாகும். இதுவரை, நாங்கள் முக்கியமாக பெரியவர்களுக்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் மீது கவனம் செலுத்துகினோம்.
நாம் பார்த்தது என்னவென்றால், தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயமாக மிகவும் கடுமையான நோய் இருந்தது; இந்த போக்கு பெரியவர்களிடம் நாம் பார்த்ததைப் போன்றது. ஆனால், பெரியவர்களை விட இந்த வயதினரில் இறப்பு குறைவாக உள்ளது என்று இந்த ஆய்வில் தொடர்புடைய ஆசிரியரும், எய்ம்ஸ் நுரையீரல் துறையின் தலைவருமான டாக்டர் அனந்த் மோகன் கூறினார்.
திட உறுப்பு புற்றுநோய்கள்- கட்டிகளுடன் கூடிய புற்றுநோய்கள் உள்ள குழந்தைகள், மிதமான மற்றும் கடுமையான நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆஸ்துமா, நீரிழிவு நோய், இதய தமனி நோய் போன்ற பிற இணை நோய்களைக் கவனித்தாலும், அவற்றில் எதுவுமே இளம் பருவத்தினரின் கடுமையான நோய் அபாயத்தை புள்ளிவிவர ரீதியாக மாற்றவில்லை.
“நாங்கள் பார்த்தது என்னவென்றால், பெரியவர்களை விட குழந்தைகளில் அறிகுறிகள் லேசானவை. தற்போதைய அலையின் போது கூட, அரிதாகவே குழந்தைகளிடையே பாதிப்பு பதிவாகிறது. அது போல, இந்த அலையின் போது மருத்துவமனையில் அனுமதிப்பதும் குறைவு என்று ஜஜ்ஜாரில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தின் பொறுப்பாளர் மற்றும் பகுப்பாய்வின் மற்றொரு ஆசிரியர் டாக்டர் சுஷ்மா பட்நாகர் கூறினார்.
நாட்டில் 94% பெரியவர்கள் ஒரு டோஸையும், 72% இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர் என்று டாக்டர் மோகன் கூறினார்,
“தடுப்பூசி மற்ற கொரோனா-பாதுகாப்பு நடத்தைகளுக்கு மேல் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டால் மற்ற அனைவரையும் போல, குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படலாம்.
தற்போது, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசியைப் பெற முடியும்; சிடஸ் கடிலா (Zydus Cadila) இன் ZyCoV-D தடுப்பூசி, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் சந்தைக்கு வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“