பா.ஜ.க. மீது அ.தி.மு.க.வின் நிலையான எதிர்ப்பை வரவேற்று தான் இந்த நாடாளுமன்ற தேர்தலி்ல் எங்களது ஆதரவை அ.தி.மு.க.,விற்கு கொடுத்துள்ளோம் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது; “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரிக்கிறது. பா.ஜ.க.,வை விட்டு வெளியே வந்த பிறகு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முழுமையாக துண்டித்துக் கொண்டு வந்திருக்கிறது அ.தி.மு.க.
பா.ஜ.க.,வை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தங்களை இரண்டாவது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். ஆனால் இங்கு தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கின்றன.
பா.ஜ.க என்கிற நாசகார பாசிச கும்பல் தமிழ்நாட்டிலே வேரூன்றி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் அ.தி.மு.க. பா.ஜ.க.,வை விட்டு வெளியே வந்த உடனே அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம்.
அ.தி.மு.க. தங்களுடைய பழைய தவறுகளை திருத்திக் கொண்டு அம்மையார் ஜெயலலிதா 1999 இல் அறிவித்தது போல இனிமேல் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அதை கூடுமானவரை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். பல்வேறுபட்ட அழுத்தங்கள் அவர்களுக்கு இருந்தாலும் அந்த அழுத்தங்களை மீறி தனித்தன்மையோடு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் ஐக்கிய முஸ்லிம் கழகம் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி அமைத்த பிறகு, என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின்சார கட்டணம் மாதா மாதம் வசூலிக்கப்படும் என்று கூறிய உறுதிமொழியை இது வரை நிறைவேற்றவில்லை. அதே போல வீட்டு வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளதால் சாதாரண மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர்.
பால் விலை ஏற்றம், நாங்க வந்தால் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையையும் டீசல் விலை மானியம் கொடுப்போம் என்பன போன்ற பல திட்டங்களை அறிவித்தார்கள் ஆனால் எதையும் தி.மு.க. அரசு இது வரை செய்யவில்லை.
எனவே பா.ஜ.க. மீது அ.தி.மு.க.வின் நிலையான எதிர்ப்பை வரவேற்று இந்த நாடாளுமன்ற தேர்தலி்ல் எங்களது ஆதரவை அ.தி.மு.க.விற்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் வழங்குகிறது.” இவ்வாறு ஹைதர் அலி தெரிவித்தார்
இந்த சந்தப்பின் போது ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஹாலிதீன், செய்யாறு அப்பாஸ், ரஃபி, நசீர், வசீர் அகமத், பாபு என்கிற ஜாஹிர், நிஷாத் ,சித்திக் ,இப்ராஹிம், வெள்ளலூர் சித்தீக், நியாஸ், முகமது ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“